அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
வரும் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு குறித்து விவாதிப்பதற்காக தான் கூட்டம் என்று அனைவரும் அழைக்கப்பட்டனர். ஆனால், அதிமுக தலைமை அலுவலக வாசலில் ஒற்றைத் தலைமை குறித்து தொண்டர்கள் கோஷம் எழுப்ப அந்த இடம் பரபரப்பானது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போதும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என்று சிலரும், இபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் பேசியிருக்கின்றனர். ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்பதில் நிர்வாகிகள் உறுதியாக இருந்திருக்கின்றனர். இதனால் இருவரில் தலைவராகப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக போஸ்டர்கள்:
இந்த நிலையில், ஓபிஎஸ் தான் ஒற்றைத் தலைமையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக தலைமை அலுவலகம் எதிரேயும், சென்னையில் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு போஸ்டரில் “அம்மா அவர்களின் நல்லாசியுடன் தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமை ஓபிஎஸ் தலைமையே” என்றும் “தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமை ஓபிஎஸ் தலைமையே” என்றும் சென்னை கொளத்தூர் பகுதி வடசென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒட்டியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள்:
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் இன்று ஒட்டத்தொடங்கியுள்ள நிலையில், இபிஎஸ்க்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி போஸ்டர் ஒட்டுவதற்கு ஒருபுறம் போட்டி நடக்க, சென்னையில் ஒட்டப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்
யார் அந்த ஒற்றைத்தலைமை?
அதே நேரத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்குழுக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக இருக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் கட்சிக்காக பல்வேறு தருணங்களில் விட்டுக்கொடுத்திருப்பதால் இம்முறை பதவி ஓபிஎஸ்சுக்காக விட்டுக்கொடுக்கப்படலாம் என்று ஒரு தரப்பினரும், அதிமுகவின் தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் இபிஎஸ் முதலமைச்சராக இருக்கும்போது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் என்பதால் அதிக ஆதரவு இபிஎஸ் தலைமையேற்பதற்கு தான் இருக்கும் என்று ஒரு தரப்பினரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுமென ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்