தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.
அதிமுக-வுடன் தோழமையா?
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இன்று திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது, திமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளை மட்டுமே கொள்கை எதிரி என்று விஜய் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் அதிமுகவை ஏதும் சொல்லவில்லை.
திமுக-வை ஆளுங்கட்சி என்ற முறையில் எதிர்க்கிறார், பா.ஜ.க.வை தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று எதிர்க்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும் அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா? என்பது குறித்து அவர்தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் தலைமையில் புது கூட்டணி:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. அதற்காக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இந்த கட்சியினருக்கு கடும் போட்டி தர 3வது அணியாக விஜய் களமிறங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் தவெக-வின் செயற்குழு கூட்டத்தில் திமுக, பாஜக-வுடன் என்றைக்கும் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
மற்ற கட்சிகளுடன் இணக்கம்:
இதனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக பக்கம் அவர் சாயப்போவதில்லை என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தவெக செயற்குழுவில் திட்டவட்டமாக கூறியிருப்பதால் அவரது தலைமையில் புதிய கூட்டணி உருவாக இருப்பதும் உருவாகியுள்ளது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே ஆளுங்கட்சியான திமுக தனது அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் திட்டவட்டமாக அறிவித்து செயல்பட்டு வருகிறார். இதனால், அவர் தொடர்ந்து திமுக மற்றும் பா.ஜ.க.வை மட்டுமே தனது பேச்சிலும், அறிக்கையிலும் விமர்சித்து வருகிறார். ஆனால், அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை அவர் பெரியளவில் விமர்சிக்கவில்லை.
அவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மட்டுமே ஆகும். மற்ற எந்த கட்சிக்கும் அவர் வெளிப்படையாக அழைப்பு விடுக்கவில்லை. அவர் திருமாவளவனையோ, பிற அரசியல் கட்சியினரையோ விமர்சிக்காமலே இருந்து வருகிறார்.
விஜய் பக்கம் சாயப்போவது யார்?
ஆனால், திருமாவளவன் உள்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், அடுத்த 10 மாதத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களும், கூட்டணி கட்சித் தாவல்களும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் கட்சித் தொடங்கியது முதலே அவருடன் சீமான் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என்று கூறியதால் தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்ந்து சீமான் விமர்சித்து வருகிறார்.