தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் ஜூலை 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வர உள்ளதால், வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

Continues below advertisement


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகைதரும் முதல்வர் மு‌.க.ஸ்டாலின் 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு இந்த மாதம் ஜூலை 15-ஆம் தேதி மாலை வருகை தரவுள்ளார். அன்றிரவு திருவெண்காட்டில் தங்கவுள்ள அவர், மறுநாள் (ஜூலை 16) மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வளாகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 




பேருந்து நிலையம் திறப்பு 


பின்னர் மணக்குடியில் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார். மேலும் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவச்சிலைகளை முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளார்.


முன்னேற்பாடு பணிகளில் அமைச்சர்கள் தீவிரம்


இந்த நிகழ்வுகளையொட்டி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதால் வந்துசெல்லும் பாதைகள், செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், தி.மு.க-வின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்துடன் மன்னம்பந்தல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 




உடன் இருந்த நிர்வாகிகள் 


உடன், திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். முன்னதாக, மயிலாடுதுறை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழுஉருவச்சிலையை முதலமைச்சர் திறக்கவுள்ளதை அடுத்து அப்பகுதியிலும் அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையினர் செய்து வருகின்றனர்.


முதல்வர் வரும் நிலையில் கட்சி நிர்வாகி படுகொலை


இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ள நிகழ்வு நடைபெறும் சிறிது தூரத்தில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.