மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை  எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ’இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து குடியரசுத் தலைவரிடம் விவாதித்தது குறித்து கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது தமிழ்நாடு சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் கூறியதாவது, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இரு தரப்பினரும் இணைந்து சுமூகமாக வாழ அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதமர் மணிப்பூருக்குச் செல்வது இன்றியமையாததாக உள்ளது. மணிப்பூரில் பெண்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குடியரசுத் தலைவரிடம் விரிவாக  எடுத்துரைத்தார். எல்லாவற்றையும் கேட்ட குடியரசுத் தலைவர் தலையசைத்துவிட்டு விடைபெற்றுச் சென்றார். குடியரசுத் தலைவர் எந்தவிதமான உறுதியும் அளிக்கவில்லை” இவ்வாறு அந்த செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் கூறினார். 


அதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே பேசுகையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசத் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக , விதி எண் 267இன் படி விவாதம் நடத்த ஏன் தயங்குகின்றனர் என கேள்வி எழுப்பினர். மேலும், குடியரசுத் தலைவரிடம், ‘ மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கவில்லை. மணிப்பூர் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு முகாம்கள் சிறப்பான முறையில் இல்லை எனவும் குடியரசுத் தலைவரிடம் கூறியதாக’ கூறினர். இந்தியா கூட்டணி சார்பில் தலைவர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 31 எம்.பிகள் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளனர். 


இந்த சந்திப்புக்கு முன்பாக, எதிர்க்கட்சியின் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் அடங்கிய குழு மணிப்பூருக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். மணிப்பூரில் உள்ள  இம்பாலுக்கு விமானம் மூலம் சென்ற அவர்கள், சுராசந்த்பூர், விஷ்ணுபூர் உள்பட மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதற்குப் பின்னர், மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்தனர். அப்போது, மக்கள் தங்களிடம் பகிர்ந்து கொண்டவற்றையும் தங்களின் அனுபவங்களையும் எம்பிக்கள் குழு ஆளுநரிடம் பகிர்ந்து கொண்டனர்.


உச்சநீதிமன்ற தலையீடு


மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மணிப்பூரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை மீது துரித நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மணிப்பூரில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 37 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு பெண்கள் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.