எடப்பாடி தலைமையில் அதிமுக ஒருங்கிணையும்:


புதுக்கோட்டையில் சசிகலாவின் சகோதரர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 4 வருடத்திற்கு முன்னர் டிடிவி தினகரனால் இபிஎஸ்க்கு பிரச்சினை வரும்போது சபாநாயகர்  தனபாலை முதல்வராக்க பரிந்துரைத்தேன்.  இதை திருமாவளவன் உள்ளிட்டோர் எல்லோரும் வரவேற்று  பேசினார்கள். அது விவாதத்திற்கும் உள்ளானது. அப்போது இருந்த தலித் எம்எல்ஏக்கள் கூட அதற்கு ஒத்து வரவில்லை. குறிப்பாக தலித் எம் எல் ஏக்கள் 38 பேர் இருந்தனர். அவர்களே அதற்கு ஒத்து வரவில்லை, 2026 தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணையும், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக ஒருங்கிணைப்பு தான்  நடக்கும். எடப்பாடிக்கு அறிவுரை கூறும் அளவிற்கு தான் பெரிய ஆள் இல்லை என்றும், தன்னை விட அவர் சீனியர் என்றும் தெரிவித்தார்.


அதிமுகவில் ஏற்பட்ட பிளவு:


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தமிழக முதல்வராக ஓ பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அப்போதே அவரை காலி பண்ண முடிவு செய்த சசிகலா அணி தீவிரமாக செயல்பட்டது. ஒருபுறம்  சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சசிகலா முதல்வராவதை தடுத்தது. அதன் பின்னர் யார் முதல்வராக இருப்பது என்பது தொடர்பாக அதிமுகவில் பிரிவு ஏற்பட்டது. சசிகலாவிற்கு ஆதரவாக இருந்த எம் எல் ஏக்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது ஒருபுறம் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை  நடத்தினார் ஓபிஎஸ். அதன்பின் ஒரு வழியாக நடந்த கலாட்டாக்கள், நாடகங்களுக்கு பின் சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். 


ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலும், ஒற்றை தலைமை பிரிவும்:


இதனிடையே முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று ஒரு நாள் கூட ஆகாத நிலையில் மீண்டும் அடுத்த முதல்வரை பற்றி பேச ஆரம்பித்தனர் சசிகலா அணியினர். சசிகலாவை முன்னிறுத்த முடியாது என்பதால் சசிகலாவின் அக்கா மகனான டிடிவி தினகரனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் வேலைகளை தொடங்கினர். பல மாதங்களாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டு பிரிவாக செயல்பட்டது. அதன்பின்னர் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை நிறுத்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்தார் ஓ பன்னீர் செல்வம். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதா  இருந்து வந்த  நிலையில் அவர் மறைவுக்குப்பிறகு கட்சி பிளவுபட்டதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகளை உருவாக்கி ஓபிஎஸ் , இபிஎஸ் செயல்பட்டு வந்தனர். அதன்பின் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற வார்த்தை தலை தூக்கியது. கட்சியை தனது தலைமையில் வலுப்படுத்த வேண்டும் என இபிஎஸ் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஓபிஎஸ் இரட்டை தலைமை தொடர வேண்டும் என தெரிவித்தார். அதன்பின்னர் நடந்த பிரச்சினையில் ஓபிஎஸ், அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து தனித்தனியாக செயல்பட்டது. 


திவாகரன் கூறிய கருத்து:


இதனிடையே மன்னார்குடியில் ஒரு நாள் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது, எடப்பாடி கூட்டும் பொதுக்குழுவிற்கு அழைப்பு வந்தால் எங்கள் தரப்பு எம் எல் ஏக்களை அனுப்பி வைப்போம், பெரும்பான்மையை இழந்து விட்டதாக அனைத்து கட்சியினரும் கூறிவரும் நிலையில் கவர்னர் நல்ல முடிவை எடுக்க  வேண்டும், தலித் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவதற்கு இது தான் சரியான தருணம். இதற்கு எதிர்கட்சிகள் ஆதரவு தர வேண்டும். உங்கள் மகனால் தான் இந்த அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.