தொடர்ந்து திமுக மீதும் கலைஞர் கருணாநிதி மீது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பரப்புவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாக மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கமாக பதிவிட்டுள்ள அவர், ’அவதூறு பரப்பும் ஈனப்பிறவிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளதோடு, ’எதற்கும் அளவு உண்டு ; ஜனநாயக மிகுதியும் நல்லதல்ல’ என்றும் கூறியிருக்கிறார்.
அதோடு, கட்சித் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை தகுந்த நேரத்தில் எடுக்கப்படவில்லையென்றால், உண்மையான திமுக தொண்டர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடும் என்றும், அப்படி அவர்கள் செயல்படும்பட்சத்தில் வந்து ‘சட்டம் கிட்டம்னு சொல்லாதீங்க’ எனவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
திமுக குறித்தும் கட்சி தலைமை பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி, அவர்கள் மீது களங்கம் கற்பிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையில் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் சரிவர எடுப்பதில்லை என்பதாலேயே எங்கள் எம்.எல்.ஏ இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் தலைவர்கள் மீது அவதூறு பரப்புவர்களை பார்த்துக்கொண்டு விசுவாசமிக்க திமுக தொண்டன் சும்மா இருக்க மாட்டான் என்றும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் விளைவு விபரீதமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்