முதற்கட்டமாக கடந்த அக்டோபர் 6ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் உள்ள பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், எஞ்சியுள்ள 35 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிக்ளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 பதவிகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் 23 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 35 பதவிகள் காலியாக உள்ளது. இவற்றில் 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 பதவிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இத்தேர்தலில் மொத்தம் 1,22,857 பேர் வாக்களிக்கின்றனர். இவர்களுக்கான 195 வாக்கு சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, ஓமலூரில் 18 வாக்குச்சாவடியில், எடப்பாடியில் 10 வாக்குச்சாவடிகள், பனமரத்துப்பட்டி யில் 8 வாக்குச்சாவடியில், அயோத்தியா பட்டினத்தில் 7 வாக்குச் சாவடிக்கும், நங்கவள்ளியில் 5 வாக்குச்சாவடியில், தாரமங்கலத்தில் 4 வாக்குச் சாவடியிலும், மேச்சேரியில் 3 வாக்குச் சாவடியும், வீரபாண்டி, தலைவாசல், வாழப்பாடியில் தலா ஒரு வாக்குச்சாவடியும் என மொத்தம் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 29 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு மஞ்சள் நிறமும், ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் இருக்கு வெள்ளை நிறத்திலும் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. இடைத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அனைத்தும் ஏற்கனவே அச்சிடப்பட்டு சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 785 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கான நான்கு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவார்கள். தேர்தலுக்கு இன்று நடக்கவிருக்கும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் ஓய்வு பெற்றது. தேர்தல் நடைபெறும் இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடக்கும் இடங்களில் மதுபானம் விற்பதற்கு அனுமதி இல்லை.