அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பாஜகவினர் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பகிர்ந்துவந்தனர். அதனடிப்படையில் ஊடகங்களில் கூட செய்திகள் வெளியாகின.


பிரதமர் பசும்பொன் வருகையின் போது, மதுரை தமுக்கத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து பசும்பொன் சாலை மார்க்கமாக செல்வார் என்றும் தமுக்கத்தில் வைத்துதான் காங்கிரஸ் ஆட்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார் என்பதால், காங்கிரஸ் எதிர்ப்பாளர் தேவர் என்று காட்டுவதற்காக இந்த ஏற்பாடு என்றும் பகிரப்பட்டு வந்தது. அதோடு, முக்குலத்தோர் சமுதாயத்தினரின் நீண்டநாள் கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரையும் பிரதமர் இந்த வருகையின்போது சூட்டுவார் என்றும் செய்திகள் கச்சைக் கட்டி பறந்தன.


அதோடு, முக்குலத்தோர் வாக்குகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பக்கம் திருப்புவதற்கான உத்தியை, பாஜக வகுத்திருப்பதாகவு அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடி தமிழ்நாடு வரவிருப்பதாகவும், இது அதிமுகவிற்கும் திமுகவிற்கும் செக் வைக்க பாஜக வகுத்திருக்கும் திட்டம் என்றும் பேசப்பட்டது.


பிரதமர் வருகை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவந்தாலும் பிரதமர் அலுவலகமோ, தமிழக பாஜக தலைமையோ அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பகிர்ந்திருந்த பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் CTR நிர்மல்குமார், ‘மாநில அரசு பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித உறுதிமொழியும் கொடுக்காத காரணத்தினால் இந்த வருடம் பிரதமர் வருவது தள்ளிப்போனதாக தகவல்.’ என பதிவிட்டிருந்தார்.



பிரதமர் மோடியுடன் CTR நிர்மல்குமார்


அதன்பிறகு, அவரது இந்த பதிவிற்கு திமுகவினர் கடுமையான எதிர்ப்புகளை ட்விட்டரில் பதிவு செய்யத் தொடங்கினர். பிரதமர் மோடி வருகை குறித்த திட்டம் என்பது 2 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட வேண்டியது என்றும், மோடி பசும்பொன் வருகிறார் என்ற செய்தி எங்கிருந்து தொடங்கியது என தெரியவில்லை என்று பாஜக அண்ணாமலை கூறியதாக வெளியான தகவலை வைத்து, சி.டி.ஆர் நிர்மல்குமாருக்கு திமுக ஐ.டி விங் அணியினரும் திமுக அனுதாபிகளும் அவருக்கு டிவிட்டரில் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து பதில் கொடுத்து வந்தனர்.






இது குறித்து தலைமைச் செயலகத்தில் விசாரித்தபோது, பிரதமர் மோடி பசும்பொன் வருவது குறித்து எந்த தகவலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லையென்றும், அதனால்தான், உளவுத்துறைக்கு தென்மண்டல காவல்துறைக்கு அது குறித்து எந்த அறிவுறுத்தலையும், ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி சொல்லவில்லை என கூறப்பட்டது. ஆனால், இதனை முழுமையாக மறுத்துள்ள, பாஜக ஐ.டி விங் மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமார், மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசிடம் இது குறித்து திட்டத்தை கேட்டதாகவும், தமிழக அரசு முறையான பதிலளிக்கவில்லை என்று கூறப்படுவது உண்மைதான் என்பதுபோல, தனது கருத்தை பகிர்ந்து வருகிறார்.


இந்த பிரச்னையால் பாஜக ஐடி விங் Vs திமுக ஐடி விங் அணியினர் இடையே காரசார கருத்து மோதல் டிவிட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து வருகிறது.