தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவை ஒற்றை தலைமை ஏற்று வழி நடத்த வேண்டுமென, தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்தில் கடந்த 6-ஆம் தேதி, விரைவில் கூடவுள்ள பொதுக்குழுவில் ஒற்றை தலைமை ஏற்க வாரீர் என வாசகங்கள் அடங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்  ஒட்டப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.




இது தொடர்பாக போஸ்டரை ஒட்டிய பெரியகுளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற நபர் மீது அதிமுக, தேனி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமையிலான அதிமுகவினர் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த நபர் அமமுகவைச் சேர்ந்தவர் என்றும், தான் செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கோரியதால் பிரச்னையை முடித்து வைக்கப்பட்டதாகவும் சையதுகான் தெரிவித்தார்.




அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23-ஆம் தேதி சென்னையில் கூட உள்ளது. அதற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்களுடன் செயற்குழு மற்றும் பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து நிர்வாகிகளும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என்று பேசியதாகவும், பெரும்பான்மையான நிர்வாகிகள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகள் மூலமாகவும் , சமூகவலை தலங்கள் மூலமாகவும் தங்களது ஆதரவுகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 




ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 10 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தேனி மாவட்ட செயலாளர் சையது கான் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியதும் இந்த கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ்சின் சொந்த ஊரான தேனியிலிருந்து இபிஎஸ்க்கு ஆதரவாக சென்றவர்கள் குறித்து மாவட்ட செயலாளர் சையது கானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது இரண்டு பேர் மட்டும் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் சென்றுள்ளார்கள். மொத்தமுள்ள 61 நிர்வாகிகளில் 59 பேர் எங்களுடன் தான் இருக்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் அனைவரும் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவே உள்ளனர் என்றார்.




இந்த நிலையில்தான் வரும் 23ம் தேதி கூடவுள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் என்ன  தீர்மானம் நிறைவேற்ற போகிறார்கள்? ஒற்றை தலைமையா? இல்லை இரட்டை தலைமையா? ஓபிஎஸ்க்கும் இபிஎஸ்க்கு நடக்கும் உட்கட்சி விவகாரத்தில் யார் நிலைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும், குழப்பத்திலும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண