தமிழகத்தின் 16 வது சட்டமன்றத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றது. குறிப்பாக 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி அமைத்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்க்கட்சி அந்தஸ்தில் தற்போது உள்ளது. மேலும் சட்டமன்றத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது குறித்து அதிமுகவில் அவ்வப்போது பரபரப்புகளும், சர்ச்சைகளும் எழுந்து வருகிற்து. இந்நிலையில் தான் அதிமுக ஏன் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது என்பது குறித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் பேசியது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.





தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலில் தான் தோல்வியை சந்தித்தோம், ஆனால் உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி இலக்கினை அடையவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே குருவம்மாபேட்டை கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.கவின்  மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை ஏற்றதோடு கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்பொழுது,  நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில், மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக்கொடுத்து தி.மு.க வினர் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை எனவும் சந்தர்ப்ப சூழ்நிலை தான் திமுக ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது என தெரிவித்துள்ளார். இதோடு அதிமுக,  பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தோம். இல்லையென்றால் 3 வது முறையாக தமிழகத்தில் ஆட்சியினை அமைத்திருப்போம் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அவர்,  பாஜக வுடன் கூட்டணி அமைத்ததால் தான் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் நமக்கு கிகை்கவில்லை என தெரிவித்தார். மேலும் சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக மீது எந்த கோபமும், வருத்தமும் இல்லை. ஆனால் இவர்கள் பா.ஜ.க வின் கொள்கை ரீதியான கருத்தில் முரண்பட்டு இருந்தார்கள். இதனால் தான் அ.தி.மு.க பாஜகவுடன் வைத்த கூட்டணியால் மிகப்பெரிய இழப்பினை சந்திக்க நேரிட்டது என தெரிவித்துள்ளார்.  குறிப்பாக விழுப்புரம் தொகுதியி்ல சுமார் 20 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது. இதில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகர்ப்பகுதியில் உள்ளது. ஆனால் 300 வாக்குகள் கூட எனக்கு கிடைக்கவில்லை எனவும், 16 ஆயிரம் வாக்குகள் நகரத்தில் குறைந்திருந்தாலும் கிராமங்களில் வாக்குகளை பெற முடிந்தது என கூறிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இதே நிலை தான் தமிழகம் முழுவதும் நடந்தது என தெரிவித்துள்ளார்.





இதேப்போன்று தான், பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருந்த காரணத்தினால் தான் தாழ்த்தபட்படவர்களின் வாக்குகளை நம்மால் பெற முடியவில்லை. பா.ம.கவுடன் இருக்கும் கொள்கை ரீதியான முரண்பாடு காரணமாக தான்  தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார். அதிமுக வுடனான கூட்டணி மட்டும் மாறியிருந்தால்,  நிச்சயம் தமிழகத்தில் அபார வெற்றியினை பெற்றிருப்போம் என கூறியுள்ளார்.  தற்போது அதிமுக தோல்விக்குறித்தும், சட்டமன்றத்தேர்தலில் அதிமுக தலைமை அமைத்த கூட்டணி குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசியிருப்பது விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான்  வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி  அதாவது நாளை மறுநாள் நடைபெறவுள்ள அதிமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் இதுக்குறித்து பேசப்படும் என்று எதிர்ப்பா்க்கப்படுகிறது.