முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106- வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆறுமுச்சந்தியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், "காங்கிரஸ் கட்சியினர் கைவிட்ட திருப்பூர் குமரன் மனைவி மற்றும் கக்கனை நேரில் சென்று பார்த்து உதவிக்கரம் நீட்டியவர் எம்.ஜி.ஆர், மனிதநேயமிக்க மனிதராக இருந்ததால் தான் எம்.ஜி.ஆரை 36 ஆண்டுகள் கழித்தும் புகழ்ந்து வருகிறோம்.

 


எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். 11 ஆண்டுகளாக தி.மு.கவை கோட்டை பக்கம் வராவிடாமல் எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார். மக்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க விலையில்லா மக்கள் நல திட்டங்கள் என கூறியது. ஆனால் தி.மு.க அரசின் திட்டங்களை இலவசம் என கூறி மக்களை அவமானப்படுத்துகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி கேட்கும் கேள்விக்கு அமைச்சர்கள் கொடுக்கும் பதில்கள் பொய்யாகவே உள்ளது.



அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை தி.மு.க., நிறுத்தி விட்டது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கான உரிமைத் தொகை இன்னும் கொடுக்கவில்லை, கம்யூனிஸ்ட் கட்சியினர் வடிவேல் பாணியில் திமுகவிற்கு தூதி பாடி வருகிறது, அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., தலைமையிலான அரசு அல்வா கொடுத்து இருக்கிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை 6 % உயரப் போகிறது, இதற்க்கான அனுமதியை மத்திய அரசின் மின்சார வாரியம் வழங்கியுள்ளது. தகுதியுள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர் அமைச்சரவையில் 27 வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.



சினிமாவில் நடித்த உதயநிதிக்கு அமைச்சரவையில் 10 வது இடத்தில் உள்ளார். பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யலாம். தி.மு.க., ஆட்சியில் தமிழக மக்கள் துன்பத்தில் உள்ளனர், திருந்தாத உள்ளங்கள் இருந்தேன்ன லாபம், தி.மு.க., ஆட்சியில் இருந்து மக்களுக்கு என்ன லாபம்" எனப் பேசினார்.