Erode East By Election 2023: அதிமுகவின் நலனுக்காக பழனிச்சாமி அணியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமே. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவது அதுதான். அதிமுகவின் நலனுக்காக நாங்கள் பழனிச்சாமி அணியுடன் இணைந்து செயல்பட தயார் எனவும் அவர் கூறியுள்ளார். 


சென்னை பசுமை வழிச்சாலையில் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தப்போது, 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். வனாகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு சட்ட விரோதமாக, எனது இசைவு இல்லாமலே நடைபெற்றது என குறிப்பிட்டார். 


இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரும் முழுத் தகுதியும் எங்களிடம் தான் உள்ளது. இரட்டை இலை தொடர்பாக தேர்தல் களத்தில் சிக்கல் ஏற்படும் போது, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என குறிப்பிட்டார்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டால் அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். 


 அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சியும் மேற்கொள்வோம். அதிமுக நலனுக்காக எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்த ஓ. பன்னீர் செல்வம் ’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை மேற்கோள் காட்டினார். தேர்தல் ஆணையம் தரப்பில் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.


அதிமுக உரிமை கோறல் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த  வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கில் விசாரணை நடந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பில் பல வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து மீண்டும் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஜனவரி 16 ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.


இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் தரப்பில் 39 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வழக்கில் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்ற நிலை உள்ளது. 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பதே அதிமுகவின் சின்னமான இரட்டை இலைச் சின்னம் தான். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினரின் நிலைப்பாடு இபிஎஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அமைந்துள்ள கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலம் என்பது திமுகவிற்கு நன்றாகவே தெரியும். இந்நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளிகாளான செங்கோட்டையன், கே.சி கருப்பணன் ஆகியோருடைய மாவட்டம் என்பதாலும் அதிமுக இந்த இடைத் தேர்தலில் இறங்கி ஒரு கை பார்ர்க தயாராகி வரும் நிலையில், சின்னம் தொடர்பான சிக்கல் எழும் நிலையில் அதிமுகவின் குறிப்பாக எடப்பாடிக்கு வெற்றி முகம் என்பது குறைவு தான்.