சேலத்தில் அதிமுக இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, 


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி எப்படி இருக்கிறது?


மிகச் சிறந்த வெற்றியை நோக்கி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. தொடக்கத்தில் புதிய வேட்பாளர்கள் என்று சொன்னார்கள். அதிமுகவிற்கு கூட்டணி பலமில்லை என்று சொன்னார்கள். அதிமுகவின் வெற்றிக்கு சாத்தியக்கூறு உண்டா என்று சொன்னார்கள். அவற்றையெல்லாம் கடந்து இந்த பழைய புராணங்களை, வதந்திகளை தவிடு பொடியாக்கி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவிற்கு ஆதரவு அலைபேசி வருகிறது. இந்த ஆதரவு அலை இலையின் பக்கம் மலர இருக்கிறது. எனவே அதிமுக இரட்டை கிழக்கு வெற்றியைத் தாண்டி மகத்தான வெற்றி சரித்திரம் படைக்க உள்ளது. 



தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை என்னவாக உள்ளது?


இந்த அரசின் மீது அதிருத்தியினை மக்கள் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு ஏற்படுத்தி உள்ள காயங்களுக்கு அதிமுக மருந்தாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு சொல்ல வேண்டிய இந்த நேரத்தில் தேர்தலுக்கான யுத்திகளை தான் திமுக வகுத்து வருகிறது தவிர மக்களுக்கு ஆதரவாக இல்லை. தேர்தலின் போதெல்லாம் வருகின்ற திமுகவை பார்த்து மக்கள் வேதனை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, அனைத்து மகளிர்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று சொல்லிவிட்டு பின்னர் தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்றார்கள்.


நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து என்று சொல்லிவிட்டு கையெழுத்து போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து பவுன் நகைகளை அடமானம் வைத்தால் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்வார்கள் என்று சொன்னார்கள். ஏழை, எளிய பெண்களின் நகைகள் ஏலத்திற்கு போகின்றது. இதன் மூலம் சொல்ல முடியாத துன்பத்தில் தமிழக தாய்மார்கள் உள்ளனர். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவற்றுக்கு ஒரு விடியலை இல்லையா, ஆறுதல் இல்லையா எப்போது எடப்பாடியார் கோட்டைக்கு போவார், ஸ்டாலின் வீட்டிற்கு போவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இடம் உள்ளது.


கொங்கு மண்டலத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்ததற்கான காரணம்? 


வேட்பாளர் என்பதை தாண்டி அதிமுகவின் கொள்கை சித்தாந்தம் தான் காரணம். அடித்தளத்தில் இருந்து கட்சியை தொடங்கிய எம்ஜிஆர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை புதிது புதிதாக தான் அறிமுகப்படுத்தினார். அதே கொள்கையுடன் தான் ஜெயலலிதா செயல்பட்டார். இந்த இயக்கம் பழையது. அரை நூற்றாண்டிற்கும் மேலாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு மேலாக வெற்றிப்பாதையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இயக்கத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு என்பது எளிதாக கிடைக்கும். உற்றார், உறவினர்களுக்கு கட்சி நடத்துவது திமுக. உடன்பிறப்புகளுக்காக கட்சி நடத்துவது அதிமுக என்றார்.


அண்ணாமலை அதிமுக அழிந்துவிடும் என்று சொன்னது குறித்த கேள்விக்கு,


அண்ணாமலை அரசியலில் தெளிவற்ற மனப்போக்கை கொண்டவராக உள்ளார். நோட்டாவிற்கு மேலே வாங்க முடியாத பாஜக இருப்பதை இன்னும் அவர் அறிந்து கொள்ளவில்லை. பாஜக தலைகீழாக நின்னாலும் தமிழகத்தில் மலராது அந்தத் தாமரை. இது தெரியாமல் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. எனவே அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப்பட்ட அண்ணாமலையின் வயதை தாண்டி அதிமுக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக வயது கூட இல்லை அண்ணாமலைக்கு. அவரது உளறலை, உச்சி வெயிலில் அவர் வாக்கு சேகரிக்கும் போது உளறல்கள் நாளுக்கு நாள் அதிகமாக தொடங்கி விட்டது என்று தான் எண்ணிக் கொள்ள வேண்டும். அவரது புத்தியை சரியாக வைப்பதற்கு தொண்டர்கள் உதவ வேண்டும்.



அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தனி கூட்டணி அமைத்தது குறித்த கேள்விக்கு,


பாஜகவிற்கு பெரிய எதிர்காலம் என்பது தமிழக மண்ணில் இல்லை. பாஜக கூட்டணியில் பாமக உள்ளது, அது மக்களின் நம்பிக்கையை இழந்து உள்ளது. தமாக உள்ளது அது நான்கு பேர் கொண்ட கட்சி தான். டிடிவி தினகரன் கட்சி உள்ளது அது கட்சி அல்ல கம்பெனி. ஓபிஎஸ் ஒரு தனி குழுவாக உள்ளார். எனவே பாஜக கூட்டணி ஒரு அமைப்பு கட்டுமானமோ இல்லை. ஜான் பாண்டியனும் அப்படித்தான். பாரிவேந்தரும் இதே போன்றதும், அவர் தலைவர் அவரது மகன் பொதுச் செயலாளர். ஏ.சி.சண்முகம் அவர் தலைவர் அவரது உறவினர்கள் அந்த கட்சியில் இருக்கிறார்கள் அவ்வளவுதான். தொண்டர்கள் பலம் இல்லாத கூட்டணியாக உள்ளது. அதிமுக மிகப்பெரிய ஆலமரம். இதை விமர்சனம் செய்பவர்கள் தான் காணாமல் போய் கொண்டு இருக்கிறார்கள். கடந்த காலத்திலிருந்து இப்போது வரை அதிமுக அழிந்து விடும், முடிந்துவிடும் சொன்னவர்களுக்கு அதிமுக நீண்ட எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுகவிற்கு வீழ்ச்சி என்பது இல்லை எழுச்சி மட்டுமே உள்ளது.


பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு, 


பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம். பெண்களுக்கு இதுவரை பாஜக என்ன செய்திருக்கிறார்கள் என்று நாம் ஆராய வேண்டும். இதேபோல், திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தொடங்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் திருக்குறளை இதுவரை ஏன் தேசிய மொழியாக அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.


சிவில் சட்டங்கள் இயற்றப்படும் என்று சொல்கிறார்கள். பெரும்பான்மை எப்படி சிறுபான்மையை நசுக்குகிறது அது தவறல்லவா? அப்படி என்னும் இல்லாத போது மக்கள் எப்படி அவர்களை ஏற்றுக் கொள்வார்கள் என்பதைத்தான் இந்த தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது என்றார்.