வால்மீகி ஜெயந்தி
வால்மீகி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் வால்மீகி திருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் கோப்பண்ணா , சொர்ணா சேதுராமன் , மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் , மாநிலச் செயலாளர் உமா பாலன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது ;
இன்று வால்மீகி பிறந்தநாளையொட்டி இந்திய முழுவதம் காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக காங்கிரஸ் சார்பாக வால்மீகி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வால்மீகி குரல் அற்றவர்களுக்கு ஆதரவாக பேசியவர்.
சென்னை தப்பித்து இருக்கிறது
சென்னையில் கனமழை பெய்த நேரத்தில் 14 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. நம் எதிர்பார்த்த அடை மழையும் , பெருமழையும் வரவில்லை எனவும் அதனால் சென்னை தப்பித்து இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
பெருமழை வந்திருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், போக்குவரத்து துறையினர் என அனைவரும் தயார் நிலையில் இருந்தார்கள்.
மழை அதிக அளவு பெய்யவில்லை என்றாலும் ஒரு சில இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு இதை சமாளித்து இருக்கிறது. இன்று காலை வரை தூய்மை பணியாளர்கள் எங்கும் பாதிப்பில்லாத வகையில் எல்லா இடங்களிலும் சுத்தம் செய்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
மழை காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தது குறித்தான கேள்விக்கு
ஆளுநருக்கு மனமாற்றம் வந்திருக்கிறது. தொடர்ந்து இப்படியே இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் அதை தான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்.
பாஜக அரசிடம் திமுக நெருக்கம் காட்டுவதாக செய்திகள் பரவுகிறதே என்ற கேள்விக்கு ,
தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சரி என தெரிவித்தார். இந்தியாவில் மக்கள் ஆட்சி நடந்து கொண்டு வருகிறா அல்லது மன்னர் ஆட்சி நடைபெறுகிறா என தெரியவில்லை. அதை எதிர்த்து ராகுல் காந்தி பேசும் போது நாக்கை அறுப்போம் என கொலை மிரட்டல் விடுகிறார்கள் என கூறினார்.
நீதிதேவதை சிலை மாற்றம்
நீதிமன்றத்தில் எதற்கு பழைய சிலையை எடுத்துவிட்டு புதிய சிலையை வைக்கிறார்கள் என தெரியவில்லை என கூறினார்.
வானிலை நிலவரங்களை துல்லியமாக சொல்ல முடியவில்லை எனவும் எல்லோரும் ஏமாற்றுவது போல வானமும் ஏமாற்றி உள்ளது என தெரிவித்தார்.