தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மீது ஆர்வத்துடன் காணப்பட்டு வந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.


மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் யாருக்கும் தங்களது ஆதரவு இல்லை என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். மேலும், 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார்.


த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்:


தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டியில் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் நாளை நடைபெற உள்ளது. சேலம் ஆத்தூரில் இந்த பயிலரங்கம் நடைபெற உள்ளது. த.வெ.க. மாநாட்டு குழுக்கள், தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் இந்த அரசியல் பயிலரங்கத்தில் பங்கேற்க உள்ளனர். நாளை காலை 9 மணிக்கு இந்த பயிலரங்கம் நடைபெற உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணிகள்:


இந்த அரசியல் பயிலரங்கத்தில் எதிர்க்கட்சிகளை எவ்வாறு அணுக வேண்டும்? தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அரசியல் மாநாடுகள், த.வெ.க.வின் கொள்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும், இந்த அரசியல் பயிலரங்கத்தில் மாநாட்டிற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இந்த அரசியல் மாநாட்டிற்கு பிறகு தீவிரம் அடையும் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளனர்.

விஜய்யின் கடைசி பட பணிகள் தீவிரம்:


தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகமும் முக்கிய அரசியல் கட்சியாக போட்டியில் குதித்துள்ளது.


அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, கவுதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிக்கின்றனர். இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.