சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, ”மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி” என தெரிவித்தார். ”தமிழகத்தில் எந்தெந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதோ, அங்கெல்லாம் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அதிமுக மாநாடு குறித்து ஓபிஎஸ் விரக்தியில் உள்ளார். மேலும் அதிமுக மாநாட்டில் நடந்த நிகழ்ச்சிகள், எனது பேச்சு பொறுத்துக்கொள்ள முடியாமல் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். 



தமிழ்நாடு படுபாதாளத்திற்கு சென்றுள்ளது என்பது குறித்து தமிழகமக்களை கேட்டால் தெரியும், மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறந்தால் மட்டும் போதாது, முழுமையாக தண்ணீர் வழங்கினால் தான் பயிர் விளைச்சல் பெறும். தான் ஒரு டெல்டாகாரன் என்று கூறியவர் என்ன போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்றார். குறுவை சாகுபடி, பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காததால் காவிரி தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன, கருகிய பயிருக்கு இழப்பீடு கிடைக்காதது தான் விடியா திமுக ஆட்சியின் செயல். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் குடிநீர் பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயம் எழுந்துள்ளது.


கர்நாடகாவில் மழை சீசன் முடியப்போகிறது தமிழகத்திலும் மழை இல்லை. குடிநீர் பிரச்சினை நிலவப்போகிறது பல்வேறு இடங்களில் குடிநீருக்காக போராட்டம் நடைபெறுகிறது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் பேசினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக முதற்கட்டமாக பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது, பாசறை குழு, மகளிர் குழு அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் பரப்புரை மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்தார்.


உயிரிழந்த கனகராஜ் ஜெயலலிதாவுக்கு ஒரு நாளாவது ஓட்டுநராக இருந்துள்ளாரா? எங்கேனும் அதுசெய்தி வெளிவந்துள்ளதா? கேள்வி எழுப்பினார். புகழேந்தி விரக்தியின் விளிம்புக்கு சென்றதால் அதுகுறித்து பேசுகிறார். அனைத்து தரப்பு தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. திமுகவிற்கு ஜால்ரா போட்டு வருகிறார் என்பதுதான் தற்போது நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் அதிமுக சாதகமாக நல்லதீர்ப்பு வழங்கியுள்ளது, அந்த விரக்தியில் தான் அவர் பேசுகிறார். தமிழகத்தில் 15 லட்சம் பேரைக் கொண்டு இதுவரை எந்த மாநாடாவது இதுபோன்று நடத்தி உள்ளதா? என்ற அளவிற்கு மதுரையில் மாநாடு கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. அந்த அளவுக்கு கட்டுக்கோப்பான இயக்கம் அதிமுக என பெருமிதம் தெரிவித்தார். அதிமுக உடைந்துவிட்டது என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு கோடிக்கு மேல், அதிமுகவின் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு இதுவும் வரலாற்று சாதனையை அதிமுக படைத்துள்ளது. ஓபிஎஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போவதாக பேசப்படுகிறதே என்ற கேள்வி, ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கட்டும் பார்க்கலாம் என்றார். 



”விலைவாசி உயர்வு என்பது ஒருத்தருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் சேர்த்தது தான், மளிகை சாமான்கள் 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. இதனை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையான கட்சி என்பதை நிரூபித்து காட்டிவருவதாக கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறியவர் ஸ்டாலின், பின்னர் நீட் தேர்வு ரத்து செய்ய எங்களிடம் ரகசியம் உள்ளது என்று கூறினர். காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின்போது நீட்தேர்வு கொண்டுவரப்பட்டது.


அதற்கு எதிராக சட்டப்போராட்டம் அதிமுக நடத்தியது. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை கூறி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவுடன், அந்தர்பல்டி அடித்து மாற்றிப் பேசுகிறார்கள், இதுதான் திராவிட மாடலா ஆட்சி என்றும் விமர்சனம் செய்தார். சேலத்தில் திமுக இளைஞர் மாநாடு பொறாமையில் நடத்தப்படுவதாக நான் நினைக்கிறேன். அதிமுக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு தரவில்லை.


நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவல்துறை எந்த ஏற்பாடும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபியிடம் மனு கொடுத்தோம். மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். சேலம் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு காவல்துறை எவ்வளவு பாதுகாப்பு தருகிறார்கள் என்று பார்க்கலாம்” என்றும் கூறினார்.