கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வேண்டும் என சிதம்பரம் நடராஜர் கோயில்  நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கடந்த 21 ம் தேதி கடிதம் மூலம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் ஒவ்வொரு கால பூஜையின் போது 30 நிமிடம் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட அனுமதிக்க வேண்டும். மேலும், அந்த உத்தரவில் கோயில் நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்பு இதர பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டணம் எதுவும் செலுத்திடாமல் தேவாரம், திருவாசகம், உள்ளிட்ட திருமுறைகளை நடராஜ பெருமான் முன்பு ஓதி வழிபடலாம் எனவும், கோயில் நிர்வாகம் மறுக்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் வழிபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.




அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன்.22)  மக்கள் அதிகாரம் அமைப்பின மணியரசன் சிவ பக்தர்கள் ராவணன், ஏழுமலை, அம்சாராணி உள்ளிட்ட சுமார் 20 க்கும் மேற்பட்டோர் நடராஜர் கோயிலுக்கு சென்று கனகசபை (சிற்றம்பல மேடை) மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடினர். பின்னர் அவர்கள் கனகசபையில் இருந்து இறங்கி கீழிருந்து நடராஜ பெருமானை பார்த்தவாறு தேவாரம், திருவாசனம் பாடினர். முன்னதாக மக்கள் அதிகாரம், சிவ பக்தர்கள் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் தேவாரம், திருவாகம் பாட போகிறோம் என்று மனு அளித்தது விட்டு கனகசபைக்கு சென்றனர். இதனையடுத்து பாதுகாப்பாக கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கப்படவில்லை என்று தெய்வத்தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம், முத்தமிழ் பேரவை, சைவத்தமிழ் பேரவையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் இந்து சமய அறநிலையத் துறையிடம் மனு அளித்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி 30 நிமிடம் தேவாரம், திருவாசகம், திருமுறை ஓதுவதற்கு இந்து சமய அறநிலைய துறை கடந்த 21-ஆம் தேதி அனுப்பிய சுற்றறிக்கைக்கு கோவில் தீட்சிதர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் அரசியல் சாசன உரிமைகளை மீறி இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை செயல்படுவதாகவும், இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.




மேலும், பாரம்பரிய வழக்கப்படி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கோயில் நிர்வாகம் மற்றும் பூஜைகளை பொது தீட்சிதர்கள் செய்து வருவதாகவும். கோயில் நிர்வாகத்திடம் கலந்தாலோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் இந்து சமய அறநிலைத்துறை அமல்படுத்த முடியாது எனவும்,   கோயில் நிர்வாகம் தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை அனுப்பிவைக்கும் உத்தரவுகள் அனைத்தும் பொருத்தமற்றது என்றும், அதனை செயல்படுத்த முடியாது எனவும், தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசியல் சாசன உரிமைகளை மீறியும் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது சட்ட விரோதமாகும். மேலும், இதுதொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதையும் இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.