சேலத்தில் தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு இணையும் விழாவில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, "நாட்டின் முதுகெலும்பாக தொழிலாளர்கள் திகழ்கின்றனர். தொழிலாளர்களின் கடும் உழைப்பால்தான் நாடு முன்னேறி வருகிறது. மற்றவர்களை சார்ந்து வாழாமல் உழைப்பு ஒன்றையே முழுமூச்சாக தொழிலாளர்கள் உள்ளனர். இன்றைய தினம் கட்டுமானத் தொழில் முழுமையாக நலிவடைந்துள்ளது. அதற்கு காரணம் இன்றைய ஆட்சியாளர்கள்தான். இரட்டை வேடம் போடுவது திமுகவினருக்கு கைவந்த கலையாக மாறிவிட்டது. கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவோம் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு, அதை நிறைவேற்றாத காரணத்தால் இன்றைக்கு கட்டுமானப் பொருட்களின் விலை பெருமளவு அதிகரித்து தொழில் பாதிப்படைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கட்டுமானப் பொருட்களைச் சேர்த்து விலையைக் குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்டிட வேலைகள் பாதியில் நிற்கின்றன. புதிய கட்டடங்கள் கட்டுமானம் நின்று விட்டது. இதைக் கண்டுகொள்ளாமல் கும்பகர்ணன் போல விடியா திமுக அரசு தூங்கிக் கொண்டுள்ளது" என்று கூறினார்.


 


மேலும், “அதிமுக ஆட்சியில் 5 லட்சம் முதியோருக்கு புதிதாக உதவித் தொகை வழங்கப்பட்டது. 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த முதியவர்கள் திமுக ஆட்சிக்கு எதிரானவர்கள் இல்லை. மக்கள் விரோத அரசாக இருக்கும் திமுக அரசு மீண்டும், முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டால் தான் கட்டுமானத் தொழில் வளம்பெறும். அதிமுக ஆட்சியில் தொழில்முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை அளித்து அடித்தட்டு மக்கள் உயர வழிவகை செய்யப்பட்டது. கல்விக்கு அதிக நிதி அளித்ததால் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் உயர்ந்திருக்கிறது. 33 ஆண்டுகால அதிமுக ஆட்சியே இதற்கு காரணம். சேலத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களால் தான் போக்குவரத்து நெருக்கடி முற்றிலும் குறைந்திருக்கிறது. அதிமுக ஆட்சியின் போது ஒரு குடும்பத்திற்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும் பொருட்களை வாங்கும் நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்ந்து விட்டது. இதனால் மாதம் 9 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் அடித்தட்டு மக்கள் கஷ்டப்படுவதை ஆளும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது” என்றார்.


 


தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தால் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று அந்த பொருட்களை வாங்கி குறைந்த விலையில் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கள் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த செப்டம்பர் மாதம் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இன்னும் கணக்கு முழுமையாக எடுக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து விட்டு தற்போது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார்கள். பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு. இதுதான் திமுக அரசின் லட்சணம் என்றார். தேர்தல் நேரத்தில் மக்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமாக பேசுவதில் திமுகவினர் வல்லவர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியே அந்தர்பல்டி அடித்து நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் வெறும் 9 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி வாய்ப்பை பெற்று வந்த நிலையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் மருத்துவக் கல்வி பயில முடிகிறது. அவர்களுக்கு அரசின் சார்பில் முழுமையாக கட்டணம் செலுத்துவதற்கும் அதிமுக ஆட்சியே காரணம்” என்று பேசினார்.