சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. அதில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகின்ற ஜூன் 11ஆம் தேதி தமிழக முதல்வர் சேலம் வருகையொட்டி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஒரு நபருக்கு கூட வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை, எந்த இடத்தில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்றாலும், எந்த இடத்திலும் நிதி இல்லை, அதை கையாடல் செய்துவிட்டார்கள். உங்களை சமாதானப்படுத்த கூறவில்லை, இருக்கும் நிலையை கூறுவதாக பேசினார். நம்பிக்கையே தளரவிட வேண்டாம், இன்னும் ஒரு மாதம் பொறுத்தீர்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக உறுதி அளித்தார். திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எந்தவித கோரிக்கைகள் இருந்தாலும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை முடித்து வைக்கும் அளவிற்கு செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.



தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் அரசு சட்டதிட்டங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறியவர், விரைவில் நகராட்சி நிர்வாகத் துறையில் பத்தாயிரம் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் தகுதியான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தகுதி இருப்பவர்களுக்கு அரசு வேலை ஏற்படுத்திக் கொடுக்க உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறினார். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குழந்தைகளுக்கு அரசு வேலை கிடைக்க முழுமையாக உங்களுடன் இருந்து செயல்படுவேன், கழகத் தொண்டர்களை மறக்கவில்லை, சரியான நேரத்தில் செய்து கொடுப்போம் என்றார். கட்சி எங்களிடம் வந்துவிட்டது அடுத்தது நாங்கள்தான் என்று கூறுகிறார்கள். ஆனால் மீண்டும் தளபதி தான் முதல்வராக வருவார். குடிநீர் தேவைக்காக 10 மாவட்டங்களில் 21 ஆயிரம் கோடி தமிழக முதல்வர் வழங்கி உள்ளார். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தவறுகளும் நடப்பதாக எதிர்க்கட்சி கூறும் நிலையில், அவர்கள் முதுகை திரும்பி பார்க்க வேண்டும், அதிமுக 100 சதவீதம் செய்த தவறில் தான் திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. மற்றவர்களை பற்றி கூறுவதற்கு முன்பாக நீங்கள் எவ்வாறு நடந்தீர்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.



அதிமுக பெரியளவில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்திருக்கிறார்கள் அது நிச்சயம் நடைபெறாது. இவர்களுக்கு தெரிந்த யுத்தியை விட கூடுதலாக நமக்கும் தெரியும் எனவும் பேசினார். இன்றைக்கு நமக்கு இருக்கும் மரியாதை ஆளும் கட்சியினர் வருகிறார்கள் என்ற மரியாதை அதை இழந்திட விடக்கூடாது. திமுக ஆட்சிக்கு தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்றால் 118 இடங்களில் அமைய வேண்டும் சேலம், திருச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஐந்தில் ஒரு பங்கு நம்மிடம் உள்ளது. ஐந்தில் ஒரு பங்கு வெற்றியை தேடி தர வேண்டும் அதற்காக திமுகவினர் கடுமையாக பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார்.