சிதறிக்கிடக்கும் அதிமுக ஒருங்கிணையும் நேரம் வந்துவிட்டதாக தேனி மாவட்ட அதிமுகவினர் பற்ற வைத்த நெருப்பு, தற்போது தீப்பந்தமாய் எரிகிறது. தேனியில் தொடங்கிய இந்த தீ, பிற இடங்களில் பரவுமா, இல்லையா என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும் . இதற்கிடையில் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் உடன் அதிமுகவில் அரசியல் செய்து, பின்னர் சசிகலா கைதுக்கு பின் டிடிவி உடன் அமமுகவில் இருந்து ஓபிஎஸ்க்கு எதிராக அரசியல் செய்தது வரை, அதிமுக-அமமுகவில் என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவர், இன்றைய தேனி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கச்தமிழ் செல்வன் ஏபிபி நாடு இணையத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ....




கேள்வி: ஓபிஎஸ்க்கு நெருக்கமான மாவட்ட செயலாளர், அவருக்கு தெரியாமல் சசிகலா இணைப்பு தீர்மானம் நிறைவேற்றியது எப்படி?


தங்கத் தமிழ்ச் செல்வன்: நான் பல முறை கூறியிருக்கிறேன். ஓபிஎஸ்-டிடிவிக்கு நெருக்கமான உறவு உள்ளது. எப்போதும் டிடிவி ஆதரவில் தான் ஓபிஎஸ் இருப்பார். டிடிவி சொல்படி தான் கேட்பார். இன்று அதிமுகவில் அவர் இருந்தாலும், அவர் செயல்பாடுகள் அனைத்தும் டிடிவி சொல்படி தான் நடக்கும். அவர்கள் சொல்லி தான், அவர் இந்த தீர்மானத்தை போட்டிருப்பார். 


கேள்வி: சசிகலா-டிடிவி வந்தால் தனது தலைமை பொறுப்பு பறிபோகும் என்று தெரிந்து ஓபிஎஸ் இவ்வாறு செய்வாரா?


தங்கத் தமிழ்ச் செல்வன்: தலைமை பொறுப்பில் அவர் என்ன சந்தோஷமாகவா இருக்கிறார்? அவரை கேட்டு அங்கு யார் செயல்படுகிறார்கள்? அங்கு அவர் செல்லா காசாக தானே இருக்கிறார். அந்த எரிச்சலின் வெளிப்பாடாக இது இருக்கும். யார் வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது. சசிகலாவோ, டிடிவியோ வந்தால் அதை அதிமுகவினர் ஏற்க மாட்டார்கள். தொண்டர்கள் அதை விரும்பவும் இல்லை. அம்மாவின் நிலைக்கு காரணமே அந்த குரூப் தான் என மக்கள் நினைக்கிறார்கள். அவர் சேர்வதால் அதிமுகவிற்கு பயனில்லை. 


கேள்வி: ஒருங்கிணைந்தால், அதிமுக பலமாகும் என நினைக்கிறீர்களா?


தங்கத் தமிழ்ச் செல்வன்: உள்ளாட்சியில் திமுக ஜெயித்திருப்பதை பார்த்தால், 99 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறோம். யார் கூட்டணி சேர்ந்தால் எங்களுக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது. 


கேள்வி: இந்த திடீர் கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வாரா?


தங்கத் தமிழ்ச் செல்வன்: அதிமுகவின் நிலைப்பாடு சரியில்லை. தலைவர் பண்பு இருவருக்கும் இல்லை. தன் சொத்தை, பணத்தை பாதுகாக்க மட்டுமே அவர்களுக்கு கட்சி. தேனியில் ஓபிஎஸ் குடும்பம் தான் டாப்பில் உள்ளனர். கட்சிக்காக உழைத்தவன் யாரும் டாப்பில் இல்லை. 


கேள்வி: அதிமுக-அமமுகவில் இருந்து வெளியில் வந்ததது சரியான முடிவு என நினைக்கிறீர்களா?


தங்கத் தமிழ்ச் செல்வன்: மக்கள் இன்று உணர்கிறார்கள். நான் திமுகவில் இணைந்ததை சரியான முடிவை எடுத்ததாக கூறுகிறார்கள். அவர்கள் பின்னால் சென்றால் சிக்கலாயிருக்கும். இதை அதிமுக தொண்டரே கூறுகிறார். 


கேள்வி: ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் இந்த தீர்மானம் நிறைவேற்றியிருப்பார்களா?


தங்கத் தமிழ்ச் செல்வன்: அது எப்படிங்க முடியும்.... ஓபிஎஸ்-யை கேட்காமல் எப்படி செய்ய முடியும்? தைரியம் இருந்தால் அவர்கள் மீது கட்சியில் நடவடிக்கை எடுங்க. கட்சியை விட்டு தூக்குங்க. அந்த துணிச்சல் இருக்கா?  இதே காரணத்திற்காக தானே அன்வர்ராஜாவை நீக்கினார்கள், புகழேந்தியை நீக்கினார்கள். சையது கானை நீக்க வேண்டுமா?  


கேள்வி: இன்னொரு தர்மயுத்தம் நடக்க வாய்ப்பிருக்கிறதா?


தங்கத் தமிழ்ச் செல்வன்: அம்மா சாவில் மர்மம் இருப்பதாக தர்மயுத்தம் எடுத்தார். அது தொடர்பா என்ன நடவடிக்கை எடுத்தார் ஓபிஎஸ்? மக்களிடம் பொய் தானே சொன்னார். அம்மா மரணத்தில் 100க்கு 100 மர்மம் இருப்பதாக கூறினாரே. அப்போது அவர் தானே முதல்வர், அப்போது அவர் என்ன செய்தார்? எல்லாம் ஏமாற்று வேலை!


இவ்வாறு தங்கத் தமிழ்ச்செல்வன் தனது பேட்டியில் கூறினார்.