சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அழுத்தம் வலுப்பெறும் சூழலில், தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், `பாஜக அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது என்று கூறுகிறது. அப்படியானால் தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் நாட்டின் மசூதிகள் அனைவற்றையும் தோண்ட வேண்டும் எனவும், உருது மொழி மீது தடை விதிக்கவும் கோரி பகிரங்கமாகப் பேசிய போது, அவரை ஏன் பதவிநீக்கம் செய்யவில்லை? ஏன் இந்த சிறப்பு பாகுபாடு, ஜே.பி.நட்டாஜி? ஏதேனும் விளக்கம் இருக்கிறதா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


மற்றொரு பதிவில், `பாஜக மதவெறியர்களின் வெறுப்புப் பேச்சுகளுக்கு இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?’ என்று கேட்டுள்ளார்.



தனது ட்விட்டர் பதிவில் தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் பிரதமர் நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு, `பாஜகவின் மதவெறியர்களின் வெறுப்புப் பேச்சுகளுக்கு சர்வதேச சமூகத்திடம் ஒட்டுமொத்த இந்திய நாடும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? பாஜக தான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்தியா ஒரு நாடாக மன்னிப்பு கேட்கத் தேவையில்லை.. ஒவ்வொரு நாளும் உள்நாட்டில் வெறுப்பை விதைத்து, பரப்பிக் கொண்டிருப்பதற்கு உங்கள் கட்சியினர் முதலில் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 






கடந்த ஜூன் 1 அன்று, முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெறுப்புப் பேச்சுகளைப் பேசியதற்காக, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி ஊடகப் பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


மேலும், தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ், `பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் மகாத்மா காந்தி படுகொலையைப் பாராட்டிய போது உங்கள் மௌனம் ஆச்சரியப்படுத்தியது. உங்களுக்கு மீண்டும் இதனை நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் ஒன்றை அனுமதித்தால், அதனை ஆதரிக்கிறீர்கள் என்று பொருள். கட்சியின் தலைமையில் இருந்து வரும் மறைமுக ஆதரவு காரணமாக நாட்டில் பரவும் மதவெறி, வெறுப்பு ஆகியவை இந்தியாவுக்கு மீண்டும் பெற முடியாது இழப்பை ஏற்படுத்திவிடும்’ எனவும் கூறியுள்ளார்.