மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,”  கடலூரில் மணல்கொள்ளை அபரிமிதமாக நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட குழியில் தான் சிறுவர்கள் சிக்கி மூழ்கி இறந்துள்ளனர். இதே போல குவாரிகளில் தோண்டப்படும் குழிகளையும் மூடாமல் விடுவதால் பெரும் ஆபத்து உள்ளது. அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்கவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

இதே போல விழுப்புரத்தில் 3 குழந்தைகள் இறப்புக்கு நிவாரணம் வழங்ப்படவில்லை. நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்ட கூடாது.



கருவில் உள்ள குழந்தைகளை பாலினம் கண்டறிவது தடை செய்யப்பட்டும் அது தொடர்கிறது. இது சமூக விரோத செயல். தமிழம் முழுவதும் விஜிலென்ஸ் கமிட்டி அமைத்து இது குறித்த செயல்பாடுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, போதை வியாபாரம் அதிகரித்து உள்ளது. அதை தடுக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க, தமிழம் முழுவதும் மாநகராட்சிகளில் போடப்பட்டுள்ள ஒப்பந்த பணிகளை ஒழித்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கும் பணிகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும். மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஆன்மீகவாதிகள் பேசிய பேச்சுக்கள் ஏற்க முடியாதவை. மதுரை ஆதீனம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார்.



முஸ்லீம்கள் தேச விரோதிகள், கம்யூனிஸ்டுகள் தேச அக்கறை இல்லாதவர்கள் என்று பேசி உள்ளார்கள்.

இதை ஆதீனம் பேச என்ன உரிமை இருக்கிறது? ஆதீனம் அரசியல் பேசலாம். ஆனால் இஸ்லாமியர்களை தேச விரோதிகள் என பேசுவது என்ன விதமான அரிசியால்? மோடிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசினால், ஆன்மீக பணியில் இருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறி விட்டீர்கள் என்பதை தான் காட்டுகிறது.

ஆதீனம் என்கிற பெயரில் மதவெறி கூடாரமாக மடங்கள் மாறிவிட கூடாது. நேரடியாக ஆதீனத்துடன் விவாதிக்க தயார்.  அறநிலையதுறை சொந்தமான சொத்துக்களை எல்லாம் ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். ஆதீன மடங்கள் என்ன அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள்? திமுக அரசு பல கோவில் சொத்துக்களை மீட்டு உள்ளார்கள்.

ஆதீன மட சொத்துக்களின் கணக்கை எடுத்து விவாதிக்க தயாரா?



கோவில்கள் வழிபாட்டு தலம் மட்டுமல்ல, அங்கு பல பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதை அரசு தான் பாதுகாக்க வேண்டும்.  ஆதீன பராமரிப்பில் இருந்த சொத்துக்களில் முறைகேடுகள் நடந்த காரணத்தால் தான் அறநிலைய துறையே உருவாக்கப்பட்டது. சிதம்பரம் கோவிலில் ஆய்வு செய்வதில் என்ன தவறு? ஏன் பதறுகிறீர்கள்? மடியில் கணமில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்? எதையோ மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தினர் செயல்படுகிறார்கள். கோவில் சொத்துக்கள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இதற்கு தனி சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். கோவில் எப்படி தீட்சிதர்களுக்கு சொந்தமாக முடியும்? அது மக்களுக்கு தான் சொந்தம். எங்கேயோ நடக்கும் ஓரிரு சம்பவங்களை வைத்துக் கொண்டு கோவில்களை மொத்தமாக ஆதீனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தவறு. முட்டை பூச்சி இருந்தால் அதற்கு மட்டுமே மருந்து தெளிக்க வேண்டுமே தவிர, வீட்டையை கொளுத்துவது நியாயம் அல்ல.



அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பாஜக தலைவர் அண்ணாமலை நிரூபித்தால் அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறுக்கே நிற்கப் போவதில்லை. தவறு யார் செய்தாலும் பரிகாரத்தை அனுபவிக்க வேண்டும். இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகி உள்ளது. பாஜக 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத அடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலேயே இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசின் செயல்பாடுகள் இப்படியே தொடர்ந்தால் இலங்கையின் நிலமை தான் இந்தியாவுக்கும் ஏற்படும்.