கடந்த வாரம், கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கும் போது சுவாமி விவேகானந்தரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், உண்மையில் நிலவரம் என்ன என்பது குறித்து காங்கிரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
விவேகானந்தர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்துவதும், ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை கிண்டல் செய்வதையும் ஒரே வீடியோவாக எடிட் செய்து காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானியை விமர்சிக்கும் விதமாக பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
"என்ன ஒரு முட்டாள்தனமான செயல். முட்டாள் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக" என ஸ்மிருதி இரானியை விமர்சித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா ட்வீட் செய்துள்ளார்.
இரானியின் கருத்துக்கு பதிலடி அளித்துள்ள காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், "பொய்களை பரப்புவதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. இரானிக்கு விஷயங்களை இன்னும் தெளிவாகப் பார்க்க உதவும் புதிய ஜோடி கண்ணாடிகள் தேவைப்பட்டால், எங்களால் அவருக்கு எப்போதும் வாங்கி தர முடியும். அவருக்கு ஒன்றை கொடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
வீடியோவில் ஸ்மிருதி இரானி கூறியிருப்பதாவது, “இன்று நான் காங்கிரஸ் கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இந்தியாவை ஒருங்கிணைக்க கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை மேற்கொள்கிறீர்கள் என்றால், குறைந்தபட்சம் சுவாமி விவேகானந்தரைப் புறக்கணிக்கும் அளவுக்கு வெட்கமின்றி இருக்க வேண்டாம். விவேகானந்தரை கவுரவிக்கும் செயலை ராகுல் காந்தி ஏற்கவில்லை போலும்" என்றார்
விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், 150 நாட்களுக்கு 'இந்திய ஒற்றுமை' நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நடைபயணத்தின் போது, காங்கிரஸ் தலைவர்கள், நாட்டின் பல பகுதிகளில் மக்களுடன் உரையாடி பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொங்கி உள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட பேரணி, 150 நாள்களுக்கு நீள்கிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
3,500 கிலோமீட்டர் தூர யாத்திரை பேரணியுடன் தொடங்கப்பட்டது. பாத யாத்திரை கடந்த வியாழக்கிழமை காலை தொடங்கியது. ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை இரண்டு தொகுதிகளாக நடைபயணம் மேற்கொள்வார்கள். அடுத்த 150 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் இதில் உள்ளடக்கும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை முடியும் வரை ராகுல் காந்தி நடந்தே செல்வார். நடைபயணம் முழுவதும் கண்டைனரிலேயே ராகுல் காந்தி தங்குகிறார். அதில், ஒரு படுக்கை, கழிப்பறை மற்றும் ஒரு ஏர் கண்டிஷனர் இருக்கிறது.