திமுக கூட்டணிக்கு பாமக வராவிட்டால் சும்மா விடமாட்டேன் என அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது, கூட்டணி கட்சியான விசிகவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முழு வேகத்தில் அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அதில் கூட்டணி கணக்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். ஆனால், அதில் இடம்பெற உள்ள மற்ற கட்சிகள் எவை என்பது தான் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுகவில் அரங்கேறும் காட்சிகளை பார்த்தால், தற்போது உள்ள கூட்டணி நீடிக்குமா அல்லது புது வடிவம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாமகவை விடமாட்டேன் - துரைமுருகன்:
சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு மற்றும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன் “ எந்த ஒரு பொருளை வாங்கினாலும் மறுநாள் விற்றால் அதன் மதிப்பு குறைந்துவிடும். ஆனால் 2 ஆண்டு கால ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக்கு மதிப்பு குறையவில்லை. மாறாக அவரது மதிப்பு கூடியிருக்கிறது. அவரது செயல்பாடுகளை மேடையில் இருக்கும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட பாராட்டி இருக்கிறீர்கள். எனவே தப்பித் தவறி கூட நீங்கள் எதிர்க்கட்சிக்கு போனால், உங்கள் இருவரையும் சும்மா விடாமாட்டோம். உங்கள் தலைவரிடம் சென்று சொல்லுங்கள், ஸ்டாலின் இப்படி பட்ட ஆட்சி செய்கிறார். அவருக்கு நாம் உதவாவிட்டால் இந்த நாடு நம்மை பற்றி என்ன கருதும் என்று உங்கள் தலைவரிடம் தைரியமாக சொல்லுங்கள்” என வலியுறுத்தினார்.
நீண்ட நாள் திட்டம்?
வன்னியர் சமூகத்தை சேர்ந்த துரைமுருகன் பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டுமென நீண்டநாளாகவே முயற்சித்து வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடமாவட்டங்களில் அக்கட்சி கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளது. எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற, பாமக கூட்டணி என அவசியம் என திமுக தலைமையும் கருதுவதாக கூறப்படுகிறது. அதற்கு வழிவகுக்கும் நோக்கிலேயே, வெளிப்படையாகவே அமைச்சர் துரைமுருகன் பாமகவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசிக அதிருப்தி..!
திமுக கூட்டணியில் நீடித்து வரும் விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மற்றும் பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என கூறி வருகிறார். இந்த நிலையில் திமுக கூட்டணிக்குள் பாமக வரவேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரே வெளிப்படையாக அழைப்பு விடுத்து இருப்பது விசிக தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி ஒருவேளை பாமக திமுக கூட்டணிக்குள் வந்தால், அந்த கூட்டணியில் இருந்து விசிக நிச்சயம் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அண்மையில் கூட, பாமகவை திருமாவளவன் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இதெல்லாம் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் மட்டுமே, எந்த கூட்டணியில் யார் இடம்பெறுவர் என்பது அடுத்த ஆண்டு தான் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.