தமிழ்நாட்டில் மாநில தலைவர்களும் தேசிய தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ள நிலையில், கோடை வெயிலுக்கு ஈடாக தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம்.


மக்களவை தேர்தல்:


இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையிலான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஏனென்றால், மக்களவை உறுப்பினர்கள்தான் பிரதமரை தேர்வு செய்வர். இவர்கள்தான் இந்தியா முழுமைக்குமான கொள்கைகள் வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பர். வெளிநாட்டு உறவுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கும் பொறுப்பும் இவர்கள் கையில்தான் இருக்கும் என்பதால், வெளிநாடுகளும் உற்று நோக்கி வருகின்றன.


இந்தியாவில் மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளானது ஜூன் 4 ஆம் தேதி தெரியவரும். தமிழ்நாட்டில் தேர்தலானது, முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ளது.


தமிழ்நாட்டில் தேர்தல்:


தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் தனித்து நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் உள்ளன. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் மின்னணு வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லும் பணியை விரைவுபடுத்தியுள்ளனர். நான்கு முனைப் போட்டி நீடித்து வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர்களை ஆதரித்தும், தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தேசிய தலைவர்கள்:


சில இடங்களில், வேட்பாளர்களை மக்கள் கேள்வி கேட்பதும், திட்டங்கள் குறித்து விமர்சித்து எதிர்ப்புகள் தெரிவிப்பதும் பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில், தேசிய தலைவர்களின் பார்வையும் தமிழ்நாட்டின் மீது அதிகமாக விழுகிறது என்பதையும் உணர முடிகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது இடத்தை பிடிக்க வேண்டும் என பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. பிரதமர் மோடியின் பலமுறை வருகை, அமைச்சர்களான அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வருகையை இதற்கு சான்றாக பார்க்கலாம்.


கோடையில் சூடுபிடிக்கும் தேர்தல்:


திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியும், தாங்கள் போட்டியிடும் தொகுகளில் அனைத்திலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தேசிய தலைவர்கள் வருகையால், தமிழ்நாட்டில் தேர்தல் களம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கோடை வெயில் கொளுத்தி கொண்டு இருக்கும் சூழ்நிலையிலும், எப்படியாவது மக்களை சந்தித்து, வாக்குளை பெற வேண்டும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் கோடை வெயிலுக்கு ஈடாக தேர்தல் பரப்புரை அனலாக சென்று கொண்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.