மத்திய பாஜகவுக்கு எதிராக, தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானா சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு , இது வெறும் ஆரம்பம்தான், இதை தொடர்ந்து பல மாநிலங்கள் வரும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு:
முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது, “ தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நீதி, சமத்துவம் மற்றும் கூட்டாட்சி உணர்வை நிலைநிறுத்தும் வகையில், நியாயமான தொகுதி மறுவரையை கோரும் ஒரு முக்கிய தீர்மானத்தை தெலுங்கானா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டை பின்பற்றி, நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானது, ஜனநாயகத்தின் சமநிலையை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதற்கான கூட்டு அழைப்பை வலுப்படுத்துகிறது. இது வெறும் ஆரம்பம். இரண்டாவது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், மேலும் பல மாநிலங்கள் அதைத் தொடர்ந்து வரும். இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் உருவாக்க, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி:
தெலுங்கானா சட்டமன்றம், இன்று ஒருமனதாக தொகுதி மறுவரையறை கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மேலும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம், 2014 இன் படி சட்டமன்றத் தொகுதிகளை 119 இலிருந்து 153 ஆக உயர்த்துவதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்வைத்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்ததாவது, " தொகுதி வரையறையானது தெற்கை நோக்கிய ஒரு தாக்குதல். மத்திய அரசு மக்கள்தொகை அடிப்படையில் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டால், 453 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் தற்போதைய 24% இல் இருந்து 19% ஆகக் குறையும். எல்லை நிர்ணயம் என்பது தெற்கிற்கு எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல். தொகுதி வரையறை நிர்ணயம் குறித்த மத்திய அரசின் கூற்றுக்கள் எல்லாம் பாதிதான் உண்மை.மத்திய அரசின் முடிவுகளும், அது உருவாக்கும் மாயத்தோற்றங்களும் முற்றிலும் வேறுபட்டவை. இது மிகவும் ஆபத்தான நிலை, எச்சரிக்கை மணிகள் ஒலிக்கின்றன.
தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவம் குறையும்:
மக்கள்தொகை அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்வது மாநிலங்களுக்கு இடையிலான நட்பு மற்றும் சுமூகமான உறவுகளைச் சிதைக்கும் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறியதை நினைவு கூர்ந்த முதலமைச்சர் ரேவந்த், எல்லை நிர்ணய விதிகள் தொடர்பான சட்டங்களைத் திருத்த இதுவே காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார். தென் மாநிலங்கள் தாங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 50% க்கும் குறைவாகவே வழங்கப்படுவதாகவும், வட மாநிலங்கள் ஒவ்வொரு ரூபாய்க்கும் 2.5 (மத்தியப் பிரதேசம் மற்றும் உ.பி) முதல் 6.06 (பீகார்) வரை பெறுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு மக்களவையில் தென்னகத்தின் பிரதிநிதித்துவம் 19% ஆகக் குறைந்துவிட்டால், தெற்கிலிருந்து எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் மையத்தில் அரசாங்கங்கள் அமைக்கப்படலாம் என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தீர்மானம்:
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கொண்டு வந்த தீர்மானமானது “ தொகுதி மறுவரை குறித்து மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினரிடம் விரிவான ஆலோசனைகளை நடத்த மத்திய அரசை வலியுறுத்துகிறது.
"மத்திய அரசு முன்னெடுத்த மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதன் விளைவாக மக்கள்தொகை பிரதிநிதித்துவம் குறையும்.மக்கள் தொகை என்கிற ஒரே அளவுகோலாக இருக்கக்கூடாது. தேசிய மக்கள்தொகை நிலைப்படுத்தலை நோக்கமாகக் கொண்ட 42வது, 84வது மற்றும் 87வது அரசியலமைப்பு திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கமும் இன்னும் அடையப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இட ஒதுக்கீட்டை வழங்கலாம்:
"எனவே, நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை முடக்குவதைத் தொடரும் அதே வேளையில், மாநிலத்தை ஒரு அலகாகக் கொண்டு, நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்யலாம், சமீபத்திய மக்கள்தொகை அடிப்படையில் எஸ்சி மற்றும் எஸ்டி இடங்களை முறையாக அதிகரிக்கலாம், மேலும் பெண்களுக்கு இடஒதுக்கீட்டையும் வழங்கலாம்.
"மேலும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்த, 2014 ஆம் ஆண்டு ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மற்றும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில சட்டமன்றத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை உடனடியாக 119 இலிருந்து 153 ஆக அதிகரிக்க வேண்டும் என்று சட்ட சபை வலியுறுத்துகிறது. மேலும், இதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு, இந்த சபை மத்திய அரசை வலியுறுத்துகிறது என தீர்மானம் வலுயுறுத்தியுள்ளது. இந்நிலையில், தெலுங்கானா சட்டப்பேரவையில், நியாயமான தொகுதி மறுவரையறை கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்