காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமாகவும் திகழ்பவர் ராகுல் காந்தி. அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது இவர் இட ஒதுக்கீடு, ஆர்.எஸ்.எஸ். குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். இவரது கருத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.


இந்த சூழலில், ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்.எல்.ஏ. ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பேன் என்றும், அவரது பாட்டியின் நிலைமை அவருக்கு வரும் என்றும் கூறியிருந்தார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.







மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்:

ராகுல் காந்திக்கு குவிந்து வரும் மிரட்டலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் பதிவிடட்டுள்ளதாவது, “ ராகுல் காந்திக்கு அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடம் என்றும், அவரது நாக்கை அறுப்பேன் என்றும் ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்.எல்.ஏ. பேசியிருப்பது குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எனது சகோதரர் ராகுல்காந்தியின் பெருகி வரும் மக்கள் ஆதரவும், புகழும் இதுபோன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. - காங்கிரஸ்:


கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியின் பரப்புரை காரணமாகவும், பா.ஜ.க. மீதான அதிருப்தி காரணமாகவும் வட இந்தியாவில் பா,ஜ.க. அவர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் மிக குறைவான இடங்களிலே வெற்றி பெற்றனர். குறிப்பாக, தனிப்பெரும்பான்மை ஆட்சி கைநழுவி சந்திரபாபு நாயுடு – நிதிஷ்குமார் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளனர்.


பா.ஜ.க. ஆட்சி 3வது முறையாக அமைந்த பிறகும் ராகுல் காந்தி அவ்வப்போது மக்களைச் சந்தித்து காங்கிரசின் செல்வாக்கை அதிகரித்து வருகிறார். மேலும், மக்களவைத் தேர்தலுக்கு பிறகும் இந்தியா கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதும் அவர்கள் கூட்டணிக்கு பலமாக உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீண்ட காலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.