சமீப காலமாக அதிமுக-வினருக்கும் – தமிழக பாஜகவினருக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு எதிராக, எ அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.


இபிஎஸ் பேச்சு:


சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடந்தபோது அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அதிமுக ஆட்சியில் நாணயம் வெளியிடப்பட்டது. இதை நான் முதல்வராக இருந்தபோது அதிமுக தொண்டனாகவும், முதல்வராகவும் இருந்து வெளியிட்டேன் அதைப்பற்றி சிறுமைப்படுத்தி பாஜக மாநில தலைவர் பேசியுள்ளார். மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் வந்து வெளியிட்டால்தான் எம்ஜிஆருக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் பேசியுள்ளார். இது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.


அண்ணாமலை பிறப்பதற்கு முன்பாகவே ஆட்சியில் அமர்ந்த தலைவர் எங்கள் தலைவர் எம்ஜிஆர். அப்போதெல்லாம் உங்கள் தலைவர்கள் எந்த பதவியிலும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று பேசினார்.




திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, அதிமுக என்ற புதிய கட்சி துவங்கி முதலமைச்சராக இருந்தார். அதை மறந்துவிட வேண்டாம் மற்ற கட்சிகளை அடையாளத்தை வைத்து மத்தியில் வெற்றிபெற்று ஆளுகிறவர்கள், எங்கள் தலைவருக்கு பெருமை சேர்க்கின்ற அவசியம் இல்லை என்றார். அதிமுக ஆட்சியில் ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி என்று விமர்சனம் செய்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைத்து போட்டியிட்டபோது எல்லாம் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினார். சொந்த தொகுதியிலேயே தோற்று விட்டீர்கள். அதிமுக கூட்டணியில் இருந்தபோது, மேலவையில் பல்வேறு மசோதாக்கள் கொண்டு வந்தபோது, நிறைவேற்ற அதிமுக தேவைப்பட்டது. அப்பொழுது நன்றாக இருந்தது. பாஜகவின் உறவை முறித்தபோது அதிமுக கெட்டதாக தெரிகிறது. இதுதான் பாஜகவின் இரட்டை வேடம் என்பது நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.


அண்ணாமலை பேச்சு:


இதையடுத்து,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “ தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, தன்மானமிக்க விவசாயி மகனை, பச்சை இங்க்கில் கையெழுத்துப்போட்டு, ஒரு பைசா வாங்காத இந்த அண்ணாமலையை கூற என்று கடுமையான சொற்களை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குறித்து பேசினார். இது பெரும் சர்ச்சையானது




தமிழிசை சௌந்தரராஜன் கருத்து


இது குறித்து முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனிடம், அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாள்ரகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை தெரிவித்ததாவது “ என்னைப் பொறுத்தமட்டில் தலைவர்களுக்கு என்று மரியாதை கொடுக்க வேண்டும், வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கையாக இருக்க முடியும் என தெரிவித்தார்.