பா.ஜ.க. தேசிய செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான சி.டி.ரவி தினசரி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,
“ பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களிடம், அண்ணாமலை எடுத்துச் செல்வார். 2024 லோக்சபா தேர்தலை நோக்கி மட்டுமல்ல, தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும்படி அவரும், அவரது குழுவினரும் செயல்படுவர். பிரதமர் மோடி அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த முருகனுக்கு மத்திய அமைச்சரவையில இடம்கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளார். தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளார். தமிழகத்தை மோடி எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு இவை உதாரணம்.
சட்டசபை தேர்தலில் தமிழக பா.ஜ.க.வினரும். அ.தி.மு.க.வினரும் ஒருங்கிணைந்து முழு மனதோடுதான் பணியாற்றினர். அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு வேறு பல காரணங்கள் உண்டு. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் வரும்போது முடிவெடுக்கப்படும்.
சட்டசபை தேர்தலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் பெரும் முன்னேற்றம் இல்லை. அரவக்குறிச்சி, தாராபுரம், ஊட்டி, திட்டக்குடி என பல தொகுதிகளில் இந்த சிக்கல் இருந்தது. முன்னரே பணியாற்றி இருந்தால் கூடுதல் இடங்களைப் பெற்றிருக்கலாம். கடைசி நேரத்தில் தொகுதி பெற்ற நிலையிலும், கடுமையாக உழைத்து வெற்றி பெற்ற இடம்தான் மொடக்குறிச்சி.
எங்கே, எப்போது பேசினாலும் கம்பரையும், திருவள்ளுவரையும் மேற்கோள் காட்டும் பிரதமர் தமிழர் விரோதியா? சீன அதிபரை மாமல்லபுரம் கூட்டி வந்து, தமிழர்களின் தொன்மையான பண்பாட்டை விளக்கி உலகறிய வைத்த மோடி, தமிழர் விரோதியா? மோடி தமிழர்களின் நண்பர். தி.மு.க.வும். அதன் கூட்டணி கட்சியினரும்தான் தமிழர் விரோதிகள். அவர்கள்தான் தமிழர் நலன்களை அனைத்தையும் காவு கொடுக்கிறார்கள்.
நீட் தேர்விற்கு முன்பு எத்தனை மாணவர்கள் மருத்துவ கல்வி பெற்றனர். நீட் தேர்விற்கு பின் எத்தனை மாணவர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற தகவலை விரைவில் நாங்கள் பொதுவெளியில் வைப்போம். அப்போது உண்மை தெரியும். மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பார்வையோடு பிரதமர் மோடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை இரு மாநிலங்களும் ஏற்றுச் செயல்பட வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாநில அரசுகளுக்குதான் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அவர்கள் தாராளமாக வரியை மாற்றியமைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து மக்களுக்கு சகாயம் செய்யலாம். மத்திய அரசை குறை சொல்லும் மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வர ஒப்புக்கொள்ளுமா?
ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி அடையாளம் உண்டு. கொங்கு பகுதிக்கு என்று உள்ள தனித்த அடையாளத்தை நாங்கள் எடுத்துப் பேசினோம். அந்த மக்களின் விருப்பத்தை நாங்கள் முன்மொழிந்தோம். அதற்கு அர்த்தம் மாநிலத்தை பிரிப்பதல்ல. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அனைத்தும் அடங்கிய ஒருமித்த ஒரே தேசத்தையே நாங்கள் விரும்புகிறோம்.
தமிழர்கள் காசி நகருக்கு செல்கின்றனர். வட நாட்டினர் ராமேஸ்வரம் நோக்கி வருகின்றனர். கர்நாடகத்தினர் திருவண்ணாமலை வருகின்றனர். தமிழர்கள் சபரிமலை யாத்திரை செல்கின்றனர். இதெல்லாம் சொல்வது ஒன்றுதான், தமிழகம் என்பது ஆன்மீக பூமி. சனாதன தர்மம் இல்லையென்றால் தமிழகம் இல்லை. சனாதன தர்மத்தையும், தமிழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழக அரசின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்.
தமிழகத்தின் வேரைத் தேடக்கூடியவர்கள் அதன் சனாதன தர்மத்தை விலக்கி விட்டு பார்க்க முடியாது. இவர்களுக்கு வேர் ஒன்றும் ஜெருசலேமிலோ, மெக்காவிலோ இல்லை. அது இங்கே, இந்த மண்ணில்தான் இருக்கிறது. இதை வலியுறுத்திதான் இனி எங்கள் பிரச்சாரம் இருக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.