சென்னை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளரை சந்தித்த பொழுது தெரிவித்ததாவது : வன்முறை எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. தற்பொழுது விமானத்தில் வரும் பொழுது நான் செய்திகளை பார்த்தேன். அதில் கேரள அரசு சாதாரண நிகழ்வாக கூறுகிறார்கள். உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது உள்துறை அமைச்சகம் சார்பில் புலனாய்வு அமைப்பை அனுப்பி இருக்கிறார்கள். எந்த இடத்தில் குண்டு வெடிப்போ அல்லது வன்முறையோ நடைபெற்றால் அது தீர விசாரிக்க வேண்டும். அது குற்றமில்லை என்றோ அல்லது சாதாரண நிகழ்வு என்றோ அரசு புறம் தள்ளி விடக்கூடாது. மாநில அரசுக்கு அப்படி ஒரு பழக்கம் இருக்கிறது.

 

பின்புலம் இருக்க வேண்டும்


 

தமிழ்நாட்டில் ராஜ் பவன் முன் வெடித்த பெட்ரோல் வெடிகுண்டாக இருக்கட்டும், அவற்றை சாதாரண நிகழ்வு தான் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்று வெடிக்கிறது என்றால் அங்கு வன்முறை பின்புலம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். அவை தீர விசாரிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் புலனாய்வு அமைப்பை அனுப்பி வைத்திருக்கிறது. எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வன்முறையாளர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

 

சாயத்தை பூசி விடக்கூடாது 


 

இதற்கு ஏதோ நிறம் பூசியதை போன்று நாம் பார்க்க கூடாது தீவிரவாத செயல்களை அரசு கடுமையாக எதிர்கொள்கிறது. இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. இது ஏதோ தேர்தலுக்காக அரசியலுக்காக சாயத்தை பூசிக்கொள்ளக் கூடாது. அவ்வாறு பூசினால் அது தீவிரவாதிகளுக்கு ஊக்கமாக போய்விடும். சாயத்தை பூசி விடக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து என தெரிவித்தார்.

 

 


கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழக எல்லைகளில் போலீசார் குவிப்பு..



 கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.  கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் மூன்று நாட்களாக யகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் பிரார்த்தனை கூட்டமானது நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 2000 பேர் அந்த இடத்தில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த மையத்தினுள் 3க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்துள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 36க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தலும் இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து மாநில தேர்தலும் நடத்தப்பட உள்ள நிலையில், கேரளாவில் நடந்த இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படியான நிலையில், கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு டிஜிபி ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வனத்துறையினர், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடம் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.