அரசியலில் ரஜினி.?
தமிழக அரசியல் களத்தில் திமுக- அதிமுகவிற்கு போட்டியாக களத்தில் இறங்க திட்டமிட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்து பல கட்ட கூட்டங்களையும், ஆலோசனையும் நடத்தினார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகியாக இருந்த தமிழருவி மணியன், அவருக்கு ரஜினியின் கட்சியில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். அடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் பின்னணி கொண்ட அர்ஜுனமூர்த்தி, ரஜினியின் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, டிஜிட்டல் தளங்கள் மற்றும் நிதி திரட்டுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உலகத்தையே முடக்கிப்போட்டது. பல மாதங்கள் வீடுகளுக்குள் மக்கள் முடங்கி கிடந்தனர். அப்போது திடீரென சூப்பர் ஸ்டாலின் ரஜினிக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து தனது அரசியல் பயணத்திற்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார். இதன் காரணமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என காத்திருந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதைவிட பல கட்சிகளில் இருந்து விலகி ரஜினிக்கு ஆதராக களத்தில் இறங்கிய நிர்வாகிகளும் விரக்தி அடைந்தனர்.
இதில் முக்கியமானர் காந்திய மக்கள் இயக்கம் என்பதை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து வழிநடத்தி வந்த தமிழருவி மணியன், தற்போது தனது கட்சியை ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு லட்சியக் கூட்டம். அது ஒரு பஞ்சவர்ண கிளி போன்றது என பாராட்டினார். விஜய் தனி அணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. எனவே அதிமுக- பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தேர்தலில் நடிகர் சிரஞ்சீவி போல் இருப்பதா.? அல்லது பவன் கல்யாண் போல இருப்பதா என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே விஜய்யிடம் உள்ளதாக தெரிவித்தவர், அதில் எதை தேர்வு செய்ய போகிறார் என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
3 கோப்பை மிளகு ரசம்- தமிழருவி மணியன்
ரஜினியின் அரசியல் பயணம் தொடர்பாக பேசியவர், ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர பெரும் முயற்சியை செய்தேன். ஆனால் திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் அது முடியாமல் போய்விட்டது. அதே நேரம் ரஜினி கட்சி தொடங்காமல் போனதற்கு தமிழருவி மணியன் தான் காரணம் என தகவல் வெளியான தகவல் வெளியானது. ரஜினியிடம் 200 கோடி ரூபாய் வாங்கி விட்டதாகவும், அதுவும் கட்சி தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு வாங்கி விட்டாரே கட்சி தொடங்கினால் இன்னும் எவ்வளவு செலவாகும் என்ற அச்சத்தில் தான் ரஜினி கட்சி தொடங்கவில்லையென தகவல் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் நான் ரஜினியிடம் பணம் வாங்கவில்லை. நான் ரஜினியை சந்தித்த போது மிளகு ரசம் மட்டுமே அருந்தினேன். அவரிடம் இருந்து நான் பெற்றது வெறும 3 கோப்பை மிளகு ரசம் மட்டுமே என தமிழருவி மணியன் தெரிவித்தார்.