தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை, தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம், பத்திர பதிவு கட்டணம் 2 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட பல முக்கியமான அறிவிப்பை அவர் வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை வெகுவாக குறைத்து காட்டி நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சாதனை படைத்துள்ளார்.



பிடிஆர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது


62 ஆயிரம் கோடியில் இருந்து 30 ஆயிரம் கோடியாக வருவாய் பற்றாக்குறை குறைப்பு


 திமுக ஆட்சி பொறுப்பேற்கும் போது 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான நிதித்துறை அமைச்சகம் குறைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கடினமான நிதி சீர்த்திருத்தங்களுக்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.


அதேபோல், கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-20ஆம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டாலும், அதைவிட ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது.


சமூக நலத் திட்டங்கள் தொடரும் – நிதி அமைச்சர் பிடிஆர் உறுதி 


நிதி சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் சமூக நலத்திட்டங்களுக்கான வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி வரும் ஆண்டுகளி வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும் என்று பேரவையில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


 


உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தையும் உயர்த்தி காட்டிய பிடிஆர் 


2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரி எட்டு சதவிதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டது. அதனால், 2020-21ஆம் ஆண்டு இதன் சதவிகிதம் 5.8ஆக குறைந்தது.






திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் அரசு எடுத்த முயற்சியின் பயனாக இந்த விகிதம் என்பது 5.8 சதவிகிதத்தில் இருந்து 6.11 சதவிகிதமாக தற்போது உயர்ந்துள்ளது. 


சொல்லி அடித்த கில்லி பிடிஆர் 


திமுக ஆட்சி அமைந்தபோது யாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி அமைச்சர் ஆக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தங்கம் தென்னரசுவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் பேசப்பட்டது. ஆனால், பொறியாளர் ஆன தங்கம் தென்னரசுவிற்கு அவர் துறை சார்ந்த தொழில்துறையை தந்து அமைச்சர் ஆக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


தமிழ்நாட்டின் நிதி நிலை அதள பாதாளத்தில் கிடந்த நிலையில் அதனை சீர்த்தூக்கி செம்மைப்படுத்த தகுந்த நபர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தான் என்று கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நிதித்துறைக்கு அமைச்சர் ஆக்கினார். அமைச்சர் ஆனதும் தமிழ்நாட்டின் நிதி நிலையை சீர் செய்வதே தனது முதல் கடமை என பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவர் தாக்கல் செய்த முதல் முழுமையான பட்ஜெட்டிலேயே அந்த அசாத்தியத்தை நிகழ்த்தி காட்டினார்.


இப்போது, அவரது மூன்றாவது பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை பெரும் அளவு குறைத்து காட்டி, தான் சொல்லி அடிப்பதில் கில்லி என்பதை அவர் நிரூபணம் செய்திருக்கிறார்.


முக்கிய அறிவிப்புகளையும் தவறவிடவில்லை - பிடிஆர்


நிதி நிலையை சீர் செய்ய பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் நிதி கூடுதலாக செலவிடக்கூடிய பல்வேறு முக்கியமான திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளையும் தனது பட்ஜெட்டில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார். குறிப்பாக, தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன், தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம், அண்ணாசாலையில் புதிய நான்கு வழி மேம்பாலம், ஆயிரம் கோடி ரூபாயில் வட சென்னை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் கவனம் பெற்றுள்ளன.