தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை அந்த துறையில் இருந்து விடுவித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பெயரில் நியமித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதற்கு காரணமாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுவரும் செய்தி, ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் BDO ராஜேந்திரனை சாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தினார் என்பதுதான். உண்மையிலேயே அமைச்சர் ராஜகண்ணப்பன் பிடிஒ ராஜேந்திரனை சாதி பெயரை சொல்லித் திட்டிதான் அவமானப்படுத்தினாரா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி ரகம்.
2020ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது முதுகளத்தூர் ஒன்றிய சேர்மனாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர் தேர்வு செய்யப்படுகிறார். இவரை எதிர்த்து திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், ஒன்றிய சேர்மன் வேட்பாளரை திமுக சார்பில் அறிவிக்கவில்லை. அப்படியிருந்தும் அந்த ஒன்றியத்தில் அதிகம் வெற்றி பெற்றது திமுக உறுப்பினர்களும் திமுகவில் சீட் கிடைக்காமல் சுயேட்சைகளாக நின்றவர்களும்தான்.
திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் நினைத்திருந்தால், திமுகவை சேர்ந்த ஒருவரை ஒன்றிய சேர்மனாக ஆக்கியிருக்க முடியும். ஆனால், அவர் நினைத்ததோ வேறு. அதிமுக ஒன்றிய சேர்மேன் வேட்பாளர் தர்மருக்கு பக்கபலமாக நின்று, திமுக உறுப்பினர்களை அவருக்கே வாக்களிக்க வைத்து, தருமரை ஒன்றிய செயலாளர் ஆக்கி அழகுபார்த்தார் காதர்பாட்சா முத்துராமலிங்கம். அதற்கு தருமர் இன்று அவரை காதர் பாட்சாவிற்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.
இது இப்படி இருக்க ஏற்கனவே மாவட்டத்தில் அமைச்சருக்கும் மாவட்ட பொறுப்பாளருக்கும் ஏழாம் பொறுத்தமாகவே இருந்து வந்திருக்கிறது. இவரை காலி செய்ய்வேண்டும் என அவரும் அவரை காலி செய்துவிட வேண்டும் என இவரும் போட்டிப் போட்டிக்கொண்டு கத்தியை உறையில் மறைத்து வைத்து இதுநாள் வரை அரசியல் செய்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், முதுகுளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, சண்முகம் உள்ளிட்ட பலர் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து, எங்களுக்கு எந்த வொர்க்கையும் காதர் பாட்சா கொடுப்பதில்லை. எல்லாவற்றையும் அவருக்கு தோதானவர்களுக்கும் அதிமுகவினருக்குமே கைக்காட்டி பெற்றுக்கொண்டுக்கிறார் என்று குமுறியிருக்கின்றனர்.
சரி, நான் பேசி வாங்கிக்கொடுக்கிறேன். மார்ச் 26ஆம் தேதி முதுகுளத்தூர் நிகழ்ச்சிக்கு வரும்போது பேசிக்கொள்ளலாம் என ஒன்றிய செயலாளர்களிடம் சமாதானம் சொல்லி அனுப்பியிருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அவர் சொன்னதுபோலவே, கடந்த 26ஆம் தேதி முதுகளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு சென்ற அமைச்சரிடம், அப்பகுதி மக்கள் காவிரி கூட்டு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை, குழாயில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர் என புகார் மனுக்களை அடுக்கியிருக்கின்றனர்.
புகார் மனுக்களை வாங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது உதவியாளரை அழைத்து இது குறித்து கேட்பதற்காக ரெகுலர் பிடிஓ ராஜேந்திரன் (அமைச்சர் மீது சாதிய குற்றச்சாட்டை வைத்தவர்), கிராம ஊராட்சி பிடிஓ அன்புக்கண்ணன் ( காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் உறவினர்) ஆகியோரை நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்திற்கு வரச்சொல்லியிருக்கிறார்.
அமைச்சர் அழைத்தும் பிடிஓக்கள் ராஜேந்திரனும் அன்புக்கண்ணனும் வராத நிலையில், கோபமடைந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், முதுகளத்தூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள நபரின் மூலம் அவர்கள் இருவரையும் தொடர்புகொண்டு, தன்னை தனது வீட்டில் வந்து சந்திக்குமாறு சொல்லச் சொல்லியிருக்கிறார்.
அதன்படி, அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டிற்கு சென்ற BDO ராஜேந்திரன் மற்றும் அன்புகண்ணன் ஆகிய இருவரிடமும் அமைச்சர் கோபமாக பேசியிருக்கிறார். ‘கூட்டு குடிநீர் திட்டம் ஒழுங்க மக்களுக்கு போய் சேரல, நீங்க எல்லாம் என்னய்யா பண்ணிகிட்டு இருக்கீங்க?’ அமைச்சர் கூப்டா கூட வரமாட்டீங்களா ? அரசு வேலைகளையெல்லாம் திமுக காரங்களுக்கு கொடுக்காம அதிமுக காரங்களுக்கு கொடுக்கச் சொல்லி உங்களுக்கு யார் உத்தரவு போட்டது ?
ஒழுங்கா நடந்துக்கலன்னா கலெக்டர்கிட்ட உடனே சொல்லி மாத்திடுவேன். வேணும்னா ஊரக வளர்ச்சி செயலாளர் அமுதா மேடம் கிட்ட கூட பேசி உன் மேல ஆக்ஷன் எடுக்கச் சொல்லிடுவேன் என தன் வழக்கமான பாணியில் பேசியிருக்கிறார் ராஜ கண்ணப்பன்.
அவரிடம் இனிமேல் சரியாக நடந்துக்கொள்கிறோம் என இருவரும் சொல்லிவிட்டு வீட்டை விட்டு இருவரும் வெளியே வந்திருக்கின்றனர். இந்நிலையில், அமைச்சர் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து ஊராட்சி பிடிஓ அன்புக்கண்ணன், தனது உறவினரான மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்திடம் தொலைபேசி மூலம் அழைத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த தகவல் கிடைத்ததும், இது மாதிரி ஒரு சந்தர்பத்திற்கு காத்திருந்ததுபோல அவசர அவசரமாக ஸ்கெட்சுகளை போட்டுயிருக்கிறார் காதர் பாட்சா முத்துராமலிங்கம். அமைச்சரிடம் திட்டு வாங்கிய பிடிஓ ராஜேந்திரன், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதால் அவரை மட்டும் வைத்து தன்னை அமைச்சர் சாதி பெயரை சொல்லித் திட்டியதாக பேட்டிக் கொடுக்க வைத்திருக்கிறார் என்கின்றனர் பிடிஓவோடு அமைச்சர் இல்லத்திற்கு சென்ற திமுக ஒன்றிய செயலாளர்கள்.
அதுமட்டுமில்லாமல், SC ஊழியர் சங்கங்கள் தங்கள் சங்கத்தின் பதிவு எண்ணை போட்டு, அமைச்சருக்கு எதிராக நோட்டீஸ் ஓட்ட வேண்டும் என்று நுண்ணியமாக தனது ஆட்கள் மூலம் அனைவருக்கும் அறிவுறுத்தல் வழங்கி செயல்படுத்தியிருக்கிறார் முத்துராமலிங்கம் (வழக்கமாக கண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டால், யாரும் சங்கத்தின் பதிவு எண்ணையெல்லாம் போட்டு ஒட்டுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) என்றும் உடன்பிறப்புகளே உண்மையை போட்டு உடைக்கின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை வரச்சொல்லி தன்னை சாதிய பெயரை சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டினார் என BDO ராஜேந்திரனை பேட்டியும் கொடுக்க செய்திருக்கிறார் காதர்பாட்சா என்றும் சொல்லும் உடன்பிறப்புகள், இவை அனைத்திருக்கும் ’மாஸ்டர் மைண்ட்’ காதர்பாட்சா மட்டும்தான் என்கின்றனர்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது BDO அவதூறு பரப்புகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் திமுக ஒன்றிய செயலாளர்கள் புகார் அளித்த நிலையில், ஆட்சியரை தொடர்புகொண்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ‘நான் இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சர் ஆகிவிடுவேன், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, நான் பார்த்துக்கொள்கிறேன்’ என பேசியிருக்கிறார் என்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
BDO ராஜேந்திரனின் பேட்டி ஊடகங்கள் / சமூக வலைதளங்கள் என வைரல் ஆன நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாக்கா மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், உளவுத்துறை மூலம் இவை அனைத்தையும் அறிந்த முதல்வர், அகில இந்திய அளவில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் முதல் நாள் அன்று, தொமுசவை அழைத்து பேசாதது, பேருந்துகளை சரிவர இயக்க நடவடிக்கை எடுக்காதது என்ற காரணத்திற்காகவே அவரை போக்குவரத்துறைக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக நியமித்திருக்கிறார். இதே நேரத்தில் ராஜகண்ணப்பன் மாற்றப்பட்ட செய்தியை ராமநாதபுர மாவட்ட காதர் பாட்சா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்கள் தங்களது வாட்ஸ அப் குழுக்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
உண்மையில், அமைச்சர் சாதி பெயரை சொல்லித் திட்டியிருந்தால் / BDO ராஜேந்திரனை அவமானப்படுத்தியிருந்தால், முதலமைச்சர் ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியே விட்டே எடுத்திருப்பார். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை, ராஜ கண்ணப்பனை பற்றி முதல்வருக்கு நன்றாக தெரியும், அதோடு உளவுத்துறை ரிப்போர்டும் இருந்ததால் அவரை வேறு துறைக்கு அமைச்சராக மாற்றியிருக்கிறார் என்றனர் தலைமைச் செயலக உயரதிகாரிகள்.
ஆனால், சாதி பெயரை சொல்லித் திட்டினார் என்று அமைச்சர் மீதே, பொத்தம் பொதுவாக ஒரு பொய்யான புகார் வந்தால் கூட, அது எப்படி பெரிதுப்படுத்தப்படுகிறது ? உண்மையை அறியாமல் சமூக ஊடகங்களில் எப்படி பொங்குகின்றனர் ? அதற்கு ஆதரவாக புகழ்பெற்ற இயக்குநர் முதல் இயக்கம் வரை எப்படி களமாடுகின்றனர் என்பதையெல்லாம் பார்க்கும்போது, SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் உண்மை நோக்கம் சிதைந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று கவலை தெரிவிக்கின்றனர் உண்மையாக சாதிக்கு எதிராக போராடும் சமூக நீதி அமைப்புகள்.
இப்படி ஒரு பொய்யான சாதிய புகார் வந்து, அது பொய்யென தெரிய வந்தபின், உண்மையிலேயே ஒருவருக்கு சாதிய ரீதியான துன்புறுத்தல், அவமானப்படுத்துதல் நடைபெற்றால் கூட அதுவும் பொய்யான புகாராகவே இருக்கும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும், இதனால் உண்மையில் பாதிக்கப்படுவது பட்டியல் இன சமூகத்தினரே என அஞ்சுகின்றனர் அவர்கள்.