போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை சாதியை கூறி திட்டியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனின் போக்குவரத்து துறை அமைச்சர் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவர் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக பதவியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜகண்ணப்பனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் பதிவிட்டிருப்பதாவது, சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்(அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ராஜகண்ணப்பன் மீது கட்சி ரீதியாகவும், துறை ரீதியாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்ததும், பாரத் பந்த் அன்று தி.மு.க.வின் தொ.மு.ச. தொழிற்சங்கமே போராட்டத்தில் ஈடுபட்டதும், சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூபாய் 35 லட்சம் வரை பறிமுதல் செய்ததும் ராஜகண்ணப்பனுக்கு எதிராக அமைந்தது. இந்த நிலையில், அவர் அரசு அதிகாரி ஒருவரை சாதி ரீதியாக திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரது துறை மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில்தான் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜகண்ணப்பனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்