ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்றார் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. முரசொலி கட்டுரைகள், டெல்லியில் கவன ஈர்ப்பு நோட்டீஸ், ஆளுநருடனான தேநீர் விருந்து புறக்கணிப்பு ஆகியவற்றின் மூலம், அண்ணா வழி வந்த திமுக அரசும் ஆளுநருடன் முரணான போக்கைக் கடைப்பிடிக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. 


ஆளுநர் மாளிகையில் 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்கத் திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, அரசு ஊழியர்கள் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் கிடப்பில் கிடக்கின்றன. எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் மசோதாவை மட்டும் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தார். 


இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டு தினத்துக்காக ஆளுநர் மாளிகையில் இன்று (ஏப்ரல் 14) நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள்  தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. 


திடீரென அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்துப் பேசினர். இதைத்தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவைத் தமிழக அரசு புறக்கணிக்கும் என்று அறிவித்தார். 208 நாட்களாக நீட் தேர்வு விலக்குக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதாகவும், தேநீர் விருந்தில் கலந்துகொள்வது நூற்றாண்டுகளைக் கடந்த சட்டப்பேரவையின் மாண்பைக் குலைக்கும் எனவும் குற்றம் சாட்டி இருந்தார். 




ஆளுநரை எதிர்த்து திமுக போராட்டம் 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்டங்கள்தோறும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார் ஸ்டாலின். அரசுத் திட்டங்களில், நிர்வாகப் பணிகளில் எப்படி ஓர் ஆளுநர் தலையிட முடியும் என்று திமுக கேள்வி எழுப்பியது. ஆளுநருக்கு எதிராக, அவர் ஆய்வு செய்யச் சென்ற இடங்களிலெல்லாம் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஆளுநர் மாளிகை கடுமையாக எதிர்த்தது. ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தால், போராடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் அறிக்கை வெளியிட்டது. 


இந்த சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு ஆளுநர் மோதல் போக்கு பெரும்பாலும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் மேகாலாய ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. 


எனினும் பதவியேற்ற பிறகு ஆளுநருடன் தமிழக அரசு சுமுகமான போக்கைக் கடைப்பிடித்தது. இதற்கிடையே குடியரசு தினத்தன்று பேசிய ஆளுநர் ரவி, நீட் தேர்வு வந்ததால்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பலன் அடைந்துள்ளதாகக் கூறி இருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


''கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி'' என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி ஆளுநரின் பேச்சைக் கண்டித்தது. ''ஆளுநர் தன்னுடைய அதிகார எல்லையை மீறிச் செயல்படத் தொடங்கியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது'' என்று விமர்சித்திருந்தது. 




அதைத் தொடர்ந்து கோவையில் தென் மண்டலப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாட்டில் இந்தியா, ஒன்றியம் குறித்து ஆளுநர் பேசியிருந்தார். அதை மறுத்து முரசொலி கண்டனக் கட்டுரையை வெளியிட்டது.


'ஆளுநரைத் திரும்பப் பெறுக'


இதற்கிடையே, டெல்லி நாடாளுமன்றத்தில் பேசிய திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மசோதா நிலைவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஆளுநரின் செயல் வெட்கக்கேடானது என விமர்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் நில்லாமல், ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என இரண்டாவது முறையாகக் கவன ஈர்ப்பு நோட்டீஸை தாக்கல் செய்தார். 


அதிமுக - ஆளுநர் மோதல் 


கால வரலாற்றில்அதிமுகவும் ஆளுநருடன் முரண்பட்டு நின்றிருக்கிறது. மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், அவருக்கும் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. 1993-ல் எழும்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநர் சென்னாரெட்டி, அங்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தது ஜெ.வுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 


அதேபோல 1995-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னாரெட்டி, மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டார். இது ஜெ. காதுக்குப் போனது. மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுவதாகக் கூறி, அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திர மற்றும் குடியரசு தினத்தன்று ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தைப் புறக்கணித்தார் ஜெயலலிதா. 




*


ஒருபுறம் அறிவாலயக் கிளை திறப்பு விழாவுக்குப் பிரதமர் மோடிக்கு அழைப்பு, அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு என்ற நடைமுறை தொடர்கிறது. இன்னொரு புறம் ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது திமுக. இது ஆடு பகை, குட்டி உறவா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த நிலையில் மரபு வழியாகப் பின்பற்றப்பட்டு வந்த தேநீர் விருந்தைத் தமிழக அரசு புறக்கணித்தது சரியா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி அரசியல் ஆய்வாளரும் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமி 'ஏபிபி நாடு'விடம் பேசினார்.


''ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான மோதல் போக்கு மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக உள்ளது. அந்தப் போக்கு தமிழகத்தில் மிதமாகத்தான் உள்ளது. தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி சித்திரை 1-க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதே வழியில் ஆளுநரும் தமிழ் புத்தாண்டுக்கு எல்லாக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கிறார். 


இதைத் தாண்டி ஆளுநரின் பிற நடவடிக்கைகள், தமிழக அரசுக்கும் பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மசோதாக்களின் மீது முடிவெடுப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 


எனினும் அரசியலமைப்புச் சட்டப்படி மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநருக்குக் கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று தேசிய சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி இருந்தார். டெல்லியில் எம்.பி.க்களும் இதையே வலியுறுத்தி இருந்தனர்.




தேநீர் விருந்தைப் புறக்கணித்தது சரியா?


ஆளுநரின் நடவடிக்கைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசின் செயல்பாடுகளுக்கு எதிரானவை என்று நினைத்து, திமுக தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ளது. அரசியலமைப்பு விதிகளின்படி, தான் சரியாகவே செயல்படுவதாக ஆளுநர் நினைக்கிறார்.


இது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?


மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான இணக்கமற்ற சூழல், அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பதற்றத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். எனினும் திமுக தலைமையிலான அரசு பெரும்பான்மையுடன் உள்ளது. மக்களின் ஆதரவு பெற்ற, அதிகாரமிக்க அரசாக உள்ளது. 


இதனால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்படாது. நெறிமுறைகளுக்கு மாறாக மத்திய அரசு நடந்துகொண்டால், அதன்மூலம் மாநில அரசு பாதிக்கப்பட்டால், மக்கள் மத்தியில் மாநில அரசு மீது அனுதாபம் ஏற்படும். அதனால் மத்திய அரசு தனது செல்வாக்கு வளையம் பாதிக்காதவாறே நடந்துகொள்ளும். 


 



ரவீந்திரன் துரைசாமி


விருந்து புறக்கணிப்பு மரபை மீறிய செயல் என்று விமர்சிக்கப்படுகிறதே?


ஒவ்வொன்றிலும் அரசியல் இருக்கிறது. நாகரிகம், மரபு விதிமுறைகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது. நாகரிகம் கருதி தேநீர் விருந்தில் கலந்துகொண்டால், அதைச் சிலர் மத்திய அரசுக்கு திமுக பயப்படுகிறது என்று விமர்சிப்பர். 


ஒரு அரசியல் கட்சி முடிவெடுக்கும்போது, தன்னுடைய கொள்கைகள், கட்சி பிம்பம், லாப- நட்டக் கணக்குகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் செயல்படும். அதைத்தான் திமுக செய்துள்ளது. இந்த முடிவு சரியானதுதான் என்று எண்ணியே தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்'' என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார்.