திமுக ஆட்சி அமைந்ததும் யார் தலைமைச் செயலாளர் ஆகப்போகிறார் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது. பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எப்படியாவது தலைமை செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று செனடாப் சாலையில் தவம் கிடந்தனர். பூங்கொத்து, சால்வை, புத்தகம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தனர். ஆனால், அவரின் திட்டம் வேறாக இருந்தது.



முதல்வர் மு.க.ஸ்டாலின்


ஓரங்கட்டப்பட்ட இறையன்புவிற்கு முக்கியத்துவம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்


கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டுப்பட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்புவை தலைமை செயலாளராக தேர்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எழுத்தாளர், எளிமையானவர், அனுபவசாலி என்றிருந்த இறையன்புவிற்கு தலைமைச் செயலாளர் பதவி கொடுத்ததை தமிழ்நாடே கொண்டாடியது. அதேபோல், சிறந்த நிர்வாகிகளாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரை தன்னுடைய தனிச் செயலாளர்களாகவும் நியமித்தார் ஸ்டாலின்.


ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 2 வருடம் ஆகவுள்ள நிலையில், தற்போது தலைமைச்செயலாளர் இறையன்பு வேறு ஒரு துறைக்கு மாற்றப்படவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கோட்டை வட்டாரத்தையும் தாண்டி பேசுபொருளாகியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள அவரை ஏன் திடீரென அரசு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.



தலைமைச் செயலாளர் இறையன்பு


தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் ?


ஆனால், தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது இறையன்புவே மாற்றலாகி போக விரும்புகிறார் என்றும் ஓய்வு பெறும் வரை அவர் தலைமைச் செயலாளராக இருக்க வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது என்றும் தெரிவித்தார்கள். இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், இந்த பேச்சு மட்டும் இன்னும்- ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்தில் ஓய்ந்தபாடில்லை.


தலைமைச் செயலாளர் ஆகிவிட்ட இறையன்புவை வேறு துறைக்கு செயலாளராகவோ அல்லது ஆணையர், இயக்குநராகவோ எப்படி மாற்றுவது என்ற கேள்வி இயல்பாகவே எழுந்த நிலையில், அவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின்  தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தனி அதிகாரம் - தலைமைச்செயலாளருக்கு நிகரான பதவி


தமிழ்நாடு தகவல் ஆணையம் என்பது சட்டரீதியான ஒரு தனி அமைப்பாக செயல்படுவதால், அதில் தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது தலைமைச் செயலாளர் அந்தஸ்திற்கு நிகரானது. அதோடு, தமிழ்நாடு அரசு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரம் தமிழ்நாடு தகவல் ஆணையருக்கு இருக்கிறது. எனவே, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டாலும் ஓய்வு பெற்ற பிறகு நியமிக்கப்பட்டாலும், நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் வரை அந்த பதவியில் அவர் இருப்பார்.


அதனால், இறையன்பு ஓய்வு பெறுவதற்கு முன்னரே மிகவும் முக்கியமான தலைமை தகவல் ஆணையர் பதவியை தர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர், தலைமை தகவல் ஆணையர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற கே.எஸ்.ஸ்ரீபாதி, முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷிலா பிரியா, ராஜகோபால் ஐ.ஏ.ஸ் ஆகியோர் பதவி வகித்துள்ளனர்.


அடுத்த தலைமைச் செயலாளர் யார் ?


இந்நிலையில், தற்போது காலியாக இருக்கும் தகவல் தலைமை ஆணையர் பதவிக்கு இறையன்பு நியமிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், இறையன்பு தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு, அதிகாரமிக்க தலைமைச் செயலாளர் பதவியை பிடிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


ஷிவ்தாஸ் மீனா, ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர், முருகானந்தம் ஆகிய இந்த 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர்தான் அடுத்த தலைமைச் செயலாளர் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஷிவ்தாஸ் மீனா அல்லது ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகிய இருவரில் ஒருவர் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. தற்போது நிதி துறை செயலாளராக உள்ள முருகானந்தம் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருப்பதால், அவரையே தலைமைச் செயலாளராக நியமிக்கலாம் என அரசுக்கு சில மூத்த அரசியல்வாதிகளும், ஓய்வு பெற்ற சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால், அவர், ஷிவ்தாஸ் மீனா, ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரை காட்டிலும் சீனியாரிட்டி குறைவு என்பதால் அரசு என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


எனவே, விரைவில் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்படலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.