அமைச்சரான உதயநிதி


திமுக ஆட்சி அமைந்ததும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை அமைச்சர் ஆக்காமல் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் மெம்பர் ஆக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் அமைச்சர் ஆகாவிட்டாலும் அமைச்சருக்கே உரிய அத்தனை மரியாதைகளும் அதிகாரங்களும் அவருக்கு கிடைத்தன. அமைச்சரே ஆகாமல் அமைச்சர்போல செயல்படும் உதயநிதியை நிஜத்திலேயே அமைச்சர் ஆக்க வேண்டும் என்று முதன் முதலில் வாய்ஸ் கொடுத்தார் அவரது நெருங்கிய நண்பரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


அவர் தொடங்க, அடுத்தடுத்த திமுக நிர்வாகிகள் அத்தனை பேரும் ஒரு சேர உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றனர்.அமைச்சரவையில் இரண்டு முறை மாற்றங்கள் நடைபெற்றபோதும் உதயநிதியை அமைச்சர் ஆக்கவில்லை முதல்வர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்ததால் அது வேண்டுதல்களாக மாறிவிடும் முன் உதயநிதியை அமைச்சர் ஆக்க ஒப்புக்கொண்டார் ஸ்டாலின்.


உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவரா ?


அவருக்கு அமைச்சர் மெய்யநாதனிடமிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையும் முதல்வரிடமிருந்து சிறப்பு திட்ட செயலாக்கத் துறையும் பிரித்து வழங்கப்பட்டது. எல்லோரும் எதிர்பார்த்தது மாதிரி அமைச்சர் ஆனார் உதயநிதி. சில நாட்களிலேயே நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் முன்னிலையில் பேசிய அன்பில் மகேஷ், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையை தனது கையில் வைத்திருப்பதால் துணை முதல்வருக்கு உள்ள அதிகாரங்களோடு உதயநிதி இருக்கிறார் என்று இன்னொரு பட்டாசை கொளுத்திப் போட்டார்.


அதன்பிறகு அவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று பேச்சுக்கள் எழத் தொடங்கின. அரியலூரில் பேசிய அமைச்சர் சிவசங்கர் உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்று தான் விரும்பவதாக தெரிவித்தார். விழுப்புரம் எம்.பி. கவுதமசிகாமணியும் உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்லும் முன்பு உதயநிதியை துணை முதல்வராக்கிவிட்டு செல்வார் என்று பேசப்பட்ட நிலையில், அப்படி ஏதும் நடைபெறவில்லை. இருந்தாலும், முதல்வர் தமிழ்நாட்டில் இல்லாத அந்த 10 நாளும் உதயநிதி ஸ்டாலினே  அறிவிக்கப்படாத ஆக்டிங் முதல்வராக செயல்பட்டு, எழுந்த பிரச்னைகளை எல்லாம் அதிகாரிகளோடு பேசி சரி செய்தார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


முதலமைச்சர் பதில்


அதே நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரின் மருமகன் சபரீசன், உதயநிதி இனி படம் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு இதைவிட பெரிய பொறுப்புகள் உள்ளது என்றும் சூசகமாக தெரிவித்தார். 


இதனையடுத்து, மீண்டும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக்கப்படவுள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்திருக்கின்றனர். சிறப்பு திட்ட செயலாக்கத்துறையோடு உள்துறையையும் கவனிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்பட்டு அவரை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்குவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறதா ? உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்படுவாரா ? என்று கேட்டதற்கு மத்திய அமைச்சரவையில் தான் மாற்றம் வரும் என செய்திகள் வருகின்றனர் என பேட்டி அளித்துள்ளார். முதல்வர் வார்த்தைகளில் இருந்து பார்த்தால், தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றமோ உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளோ இல்லை என்பதைதான் புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.