விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, நெல்லை மாவட்டத்திலுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வந்தனர்.



தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் தரவேண்டும்  என்பது மரபு. இருப்பினும் திமுக ஆட்சியின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றது.
 




 

இனிப்பு என்னவென்றால், மத்திய அரசுடன் இணைந்து இரண்டாம் அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. கசப்பு என்னவென்றால் ஒன்றிய அரசின் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை தேவையில்லாமல் பேசி வருகின்றனர். தமிழகத்தில் அனேக இடங்களில் பாஜக தொண்டர்களை குறித்து கைது செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை என்பது முடித்து வைக்கப்பட்ட வழக்கு. அந்த வழக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக  வழக்கை மீண்டும் கையிலெடுப்பது போல தோன்றுகிறது. இதுபோலவே, அமலாக்கப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனைகளையும் செய்து வருகின்றனர்.



இதையெல்லாம் முதல்வர் மு.க. ஸ்டாலின் விட்டுவிட்டு,  கொரோனா மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அதை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்தியாவில்  54 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2.5 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அணைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், என்றார்.

இதைத் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகிகளிடம் சிறிது நேரம் உரையாடினர். 

 

தொடர்ந்து நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். திமுக ஆட்சி தொடர்பாக திண்பண்டங்களை முன் ஊதாரணமாக வைத்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள ஒப்பீடுக்கு திமுக தரப்பில் எந்த மாதிரியான எதிர்வினை இருக்கும் என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே போல கோடநாடு விசாரணைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தரப்பில் தற்போது கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.