தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வியூகத்தை வகுத்து வருகின்றனர். 

Continues below advertisement

ஆட்சியிலும் பங்கு:

ஆளுங்கட்சியான திமுக தங்களது ஆட்சியைத் தக்க வைக்கவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் தயாராகி வருகின்றனர். அதேசமயம், இவர்களுக்கு போட்டியாக அறிமுக கட்சியான தவெக களமிறங்கியுள்ளது. தனது திரையுலக செல்வாக்கை நம்பி களத்தில் இறங்கியுள்ள விஜய்யின் முதல் தேர்தலான இந்த தேர்தலில் அவருக்கு பலமாக கருதப்படுவது முதல் தலைமுறை வாக்காளர்கள். 

இந்த தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காக இருப்பது கூட்டணி என்றே கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சமீபகாலமாக நடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் பங்கு என்பது ஆட்சியைப் பிடிக்க ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு அவசியம்? என்பதை காட்டி வருகிறது. 

Continues below advertisement

கோரிக்கை வைக்கும் கூட்டணி கட்சிகள்:

அறிமுக கட்சியாக களத்தில் இறங்கிய விஜய் தன் பக்கம் மற்ற கட்சிகளை இழுப்பதற்காக அவர் எடுத்த அஸ்திரம் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. இந்த கோரிக்கையை அவர் முன்வைத்தபோது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பல தரப்பிலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அதை வரவேற்றனர். ஆனாலும், அவருடன் யாரும் கூட்டணிக்குச் செல்ல தற்போது வரை தயாராக இல்லை.

ஆனால், தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியில் மறைமுகமாக இந்த கோரிக்கையை வைத்து வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். மேலும், விசிக தலைவர் திருமாவளவனும் காலம் வரும்போது ஆட்சியில் பங்கு கேட்போம் என்று பேசியுள்ளார். 

வலுவாகிறதா?

அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக-வின் முடிவு எடுக்கும் அதிகாரமான அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். தற்போது, எந்த விரிசலும் இல்லாமல் இருந்தாலும் பாஜக-வின் உள்ளே அந்த கோரிக்கை இன்னும் இருந்து வருவதாகவே கூறப்படுகிறது. 

காங்கிரஸ், பாஜக, விசிக என கூட்டணியில் மட்டுமே இடம்பிடித்து வந்த கட்சிகள் தற்போது ஆட்சியிலும் பங்கு என்ற கோரிக்கையை வலுவாக எடுத்து வருகின்றனர். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூட்டணியில் மட்டுமே இடம்பிடித்து வந்த கட்சிகள் நீண்ட நாட்களாகவே விரும்பி வருகின்றனர். 

கூட்டணியையே மாற்றுமா?

வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தேவை என்பது மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மிகவும் வலுவான கூட்டணியாக வைத்துள்ளது திமுக. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதிமய்யம் என மிகப்பெரிய பலத்தை கொண்டுள்ளது. 

அதிமுக-வில் பாஜக-வைத் தவிர எந்தவொரு பெரிய கட்சியும் இல்லாத நிலையில், பலமான கூட்டணி கொண்டுள்ள திமுக-வில் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள், 2026 பிறந்த பிறகு கூட்டணியையே மாற்றும் அளவிற்கு வலுவான கோரிக்கையாக மாறுமா? அல்லது கோஷத்துடன் கோஷமாகவே போகுமா? என்பது அடுத்தடுத்த மாதங்களில் தெரிய வரும்.