கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை இதுவரை திமுகவில் இணைக்க ஓகே சொல்லாத ஸ்டாலின், முதன்முதலாக மதிமுக முன்னாள் நிர்வாகி முத்துரத்தினத்தை திமுகவில் இணைத்ததன் பின்னணியில் பெரிய மாஸ்டர் ப்ளான் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக உளவுத்துறை ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுக்க, அதன் எதிரொலியாகவே ஸ்டாலின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் மதிமுகவுக்கு வார்னிங் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி

மதிமுகவில் கடந்த சில நாட்களாகவே குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் இணைந்த பிறகே அங்கு பல குளறுபடிகள் அரங்கேற தொடங்கியது. வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் எழுப்பி திமுகவில் விலகி தனிக்கட்சி தொடங்கியவர் வைகோ. இந்நிலையில் அவரே தனது மகன் துரை வைகோவை முதன்மை செயலாளர் ஆக்கியது மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் வைகோவுக்கு பிறகு தான்தான் என்பதுபோல மதிமுகவில் இருப்பவர் மல்லை சத்யா.. ஆனால் துரை வைகோவின் அரசியல் பிரவேசம் மல்லை சத்யாவுக்கும் பேரிடியாக அமைந்தது. ஈகோ பிரச்சனை, அதிகார மோதல் என மல்லை சத்யா - துரை வைகோ இடையே மோதல் வெடிக்க தொடங்கியது.

பாஜக, துரை வைகோவிடம் பேரம்

அதே நேரத்தில் ராஜ்ய சபா சீட்டை எதிர்பார்த்திருந்த வைகோவுக்கு திமுக ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் மதிமுக திமுக மீது அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இதனையடுத்துதான் எதிர்க்கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து மதிமுகவை உடைக்க திட்டம் தீட்டத் தொடங்கின. துரை வைகோவும் பாஜக உடன் நெருக்கம் காட்டத் தொடங்கியதாகத் தகவல் வெளியானது. வெங்கைய்ய நாயுடு, சந்திரபாபு நாயுடு போன்றோரை தூது விட்டு பாஜக, துரை வைகோவிடம் பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தங்கள் கூட்டணியில் இணைந்தால் வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் அல்லது துரை வைகோவுக்கு அமைச்சரவையில் இடம் என பாஜக ஆஃபர் வழங்கியதாகவும் துரை வைகோ அதனை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனியர் முத்துரத்தினத்தை திமுகவில் இணைத்த ஸ்டாலின்

இதனை உளவுத்துறை மூலம் எப்படியோ தெரிந்து கொண்ட ஸ்டாலின், மதிமுகவுக்கு ஆட்டம் காட்ட முடிவெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாகவே இதுவரை கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை திமுகவில் இணைய அனுமதிக்காத ஸ்டாலின், முதன்முறையாக மதிமுக சீனியர் முத்துரத்தினத்தை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

கூட்டணிக் கட்சி நிர்வாகியை கட்சிக்குள் அனுமதித்தால் அது திமுக மதிமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிந்தும் ஸ்டாலின் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது வைகோவுக்கு கொடுக்கும் வார்னிங் என சொல்லப்படுகிறது.