தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சி நடைபெறும் என அமித் ஷா முன்னர் தெரிவித்திருந்த நிலையில், அதை பல முறை மறுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் பேசியபோது கூட, அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும், தான் எடுப்பதே இறுதியான முடிவு என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கூட்டணி ஆட்சிதான் என உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்ணாமலை பேசியது என்ன.?
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, கூட்டணி ஆட்சி குழப்பம் குறித்து விளக்கமளித்தார்.
அதிமுக கூட்டணி வெல்லும் பட்சத்தில், கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும், அதில் அமித் ஷா உறுதியுடன் இருப்பதாகவும் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார். இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித் ஷாவிடம் பேசுங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தனது பேட்டிகளில் அமித் ஷா அதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், அவர் சொல்வதையே தான் கூறி வருவதாகவும் விளக்கமளித்தார் அண்ணாமலை. அதிமுக மட்டும் ஆட்சி என்று அமித் ஷா சொல்லாத போது, நானும் அவ்வாறு கூற மாட்டேன் என அண்ணாமலை கூறினார்.
இந்த விஷயத்தில் அதிமுகவிற்கு நெருடல் இருந்தால், அமித் ஷாவிடம் பேச வேண்டும் என்றும், கூட்டணி ஆட்சி என்பதை அமித் ஷா பலமுறை மிகத் தெளிவாக சொன்ன பிறகு, ஒரு தொண்டனாக அந்த கருத்தை மாற்றி, கூட்டணி ஆட்சி இல்லை என தான் கூற முடியாது என்றும் தெரிவித்தார் அண்ணாமலை.
அமித் ஷா அப்படி சொன்ன பிறகும், அதை தூக்கிப்பிடிக்கவில்லை என்றால், தான் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“அமித் ஷாவே கூட்டணியை உருவாக்கினார்“
அதிமுக - பாஜக கூட்டணி உருவானதில் தனது பங்கு எதுவும் இல்லை என்று தெரிவித்த அண்ணாமலை, அமித் ஷாவே கூட்டணியை உருவாக்கினார் என்றும், அதனால் அவர் எடுப்பதே இறுதி முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணி அமைத்ததில் தனது பங்கு இல்லாதபோது, தன்னுடைய தலைவர்கள் பேசியதையே தான் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்றும், அவர்கள் கூட்டணி ஆட்சிதான் என்று பேசியதாக தான் நம்புவதாகவும், அதனால் அதில் உறுதியாக இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அழைத்து, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால், தானும் மாற்றிக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
விமர்சனங்களுக்கு பதில் கூறிய அண்ணாமலை
அண்ணாமலை கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார் என்று கூறப்படும் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், தன்னுடைய தலைவர் பேசிய கருத்திற்கு வலு சேர்க்கவில்லை என்றால், ஒரு பாஜக தொண்டனாகவோ, தலைவனாகவோ இருப்பதற்கான தகுதி தனக்கு இல்லை என்று அர்த்தம் என தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் தன்னுடைய தனிப்பட்ட கருத்து எதையும் பேசவில்லை என்றும், அமித் ஷா பேசியதைத் தொன் முன்வைப்பதாகவும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார். மேலும், தலைவர் சொன்ன கூட்டணி ஆட்சி என்பதை ஏற்காமல், தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் என்று பதிலளித்து, தலைவரை Defend செய்ய முடியாவிட்டால், தான் ஏன் அரசியல் கட்சியில் இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது இந்த பேட்டி தற்போது அதிமுக கூட்டணியில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும், எடப்பாடி பழனிசாமி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.