அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 


அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர். 


இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


இதற்கிடையில் நிகழ்ச்சி நடைபெறும் வானகரத்தில் சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் தனது காரில் புறப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சார வாகனத்தில் வானகரம் நோக்கி புறப்பட்டார். வழியில் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்ற நிலையில் இருவரின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. 


இதனைத் தொடர்ந்து உடனடியாக மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முதலில் வந்தார். மேலும் கூட்டம் நடைபெறும் அரங்கினுள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த போது ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு தீர்மானங்களை முன்மொழிய, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிவதாக தெரிவித்தார்.


அதன்பின் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான சி.வி.சண்முகம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே மற்ற தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 


இதனைத் தொடர்ந்து அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக தற்போதைய தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பெயரை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் வழி மொழிந்தனர். இதனையடுத்து அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண