தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனிமேலாவது தீவிரவாதிகள் விஷயத்தில் தமிழக அரசு கடுமையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தீவிரவாதம் தலை தூக்கத் தொடங்குகிறது. அதனால், வாக்கு வங்கி அரசியலை மட்டும் மனதில் கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பொறுப்பேற்று அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
கோவை குண்டு வெடிப்பு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயம் என்பதால், அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணம்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாசாரம் பெருகி வருகிறது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிடும்.
தமிழகத்தில் தமிழ்தான் தாய்மொழி. எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தாய்மொழிக் கல்வி அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதுபோல, தமிழக மக்கள் எந்தவொரு மொழியையும் விரும்பித்தான் ஏற்றுக் கொள்வார்களே தவிர, திணிப்பை விரும்ப மாட்டார்கள்.
வருகிற 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரு கட்சி தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைப்பர். ஏற்கெனவே கடந்த 1965 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பு காரணமாகவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. தமிழகத்தில் இதுவரை காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு இந்தி திணிப்பு முயற்சி காரணம். எனவே, அதுபோன்ற விபரீத முயற்சியில் மத்திய அரசு ஈடுபடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு
கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஜமேஷா முபீன் வீட்டில் வெடிபொருட்கள் கைபற்றபட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.