திமுக-விற்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலில் இருந்தும் ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று பல செய்தி நிறுவனங்களை அழைத்து அவர் நேர்காணல் அளித்திருக்கிறார்.
திரும்பத் திரும்ப பேசிய ஆதவ் – குழப்பத்தில் இருக்கிறாரா அர்ஜூன் ?
அதிலும் பரபரப்பான கருத்துகளை பேசி அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்தால், அதற்கு பதிலாக திரும்பத் திரும்ப என்பதுபோல பேசியதையே திருப்பி, திருப்பி பேசி, தான் என்ன பேச வேண்டும் என்ற தெளிவில்லாமல் ஏதேதோ பேசி, உளறிக்கொட்டியிருக்கிறார் ஆதவ்.
தன் மீது திருமாவளவன் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்று பெரிதும் நம்பியிருந்த ஆதவ் அர்ஜூனா, அதற்கு எதிர்மாறாக நடந்ததால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் பதற்றத்தில் இருப்பது அவரது நேர்காணல் வழியாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
வேலு பேசினார். ஆனால், அது கட்சியின் கருத்து – என்ன சொல்ல முயல்கிறார் ஆதவ்
அவர் அளித்த பேட்டியில், விஜயோடு அம்பேத்கர் புத்தக வெளியீட்டுக்கு விழாவுக்கு திருமாவளவன் செல்வதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்பதை அமைச்சர் ஏ.வ.வேலு திருமாவளவனிடம் தெரிவித்ததாக கூறியுள்ள ஆதவ், அது திமுகவின் அழுத்தம் தானே என்ற கேள்விக்கு திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என பதிலளித்திருக்கிறார். இது அவரது குழப்பமான மனநிலையையும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருப்பதையும் காட்டுகிறது.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு ஏதோ பேசிய ஆதவ்
இந்நிலையில், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அரசியல் கருத்துகள் பேச வேண்டாம் என்று திருமாவளவன் உங்களிடம் தெரிவித்தும் அதையும் மீறி நீங்கள் அரசியல் பேசியது என்பது கட்சித் தலைவர் உத்தரவை மீறியதாகதானே அர்த்தம் ? என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கிய ஆதவ் அர்ஜூனா, ”காலையில இருந்து ஓடிகிட்டு இருக்கோம், இந்த ஊர்ல தலைவாசல் எங்கன்னே தெரியலையேடா” என்ற வடிவேல் காமெடியை நினைவுப்படுத்தும் விதமாக, ’அதாவது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அடிப்படை காரணம் இருக்கும்’ என்ற பதிலளிக்கத் தொடங்கிய ஆதவ் அர்ஜூனா, நான் முன்னர் அளித்த பேட்டி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சலை கொடுத்திருக்கலாம், கோபத்தை வர வைத்திருக்கலாம் என்று பேசிக்கொண்டே செல்ல, இடையில் அவரை மறித்த நெறியாளர், அந்த பேட்டியில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதற்கான விளக்கத்தை நான் கேட்கவில்லை. திருமாவளவன் அரசியல் பேசக் கூடாது என்று சொல்லியும் நீங்கள் அதையும் மீறி பேசியது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்தானே என்று கேட்க, அதற்குதான் பதில் சொல்ல வருகிறேன் என்று மீண்டும் பழைய பஞ்சாமிர்தம் மாதிரி அரைத்த மாவையே ஆதவ் அர்ஜூனா அந்த இண்டர்வியூவில் அரைத்துள்ளார்.
காஞ்சி மகா பெரியவர் நல்லவரா கெட்டவரா? மாற்றி மாற்றி பேசும் ஆதவ்
அதோடு, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் காஞ்சி மகா பெரியவர் சாமிகள் நல்லவர் என்று குறிப்பிட்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, தற்போது அவர் அளித்திருக்கும் நேர்காணலில், நான் மகாபெரியவரை ஏற்றுக்கொண்டவன் இல்லை. நான் ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்டவன். எந்த ஆன்மீகத்தையும் தான் பின்பற்றாதவன் என்று பல்டி அடித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மீடியாவை கூப்பிட்டு பேட்டி கொடுத்த ஆதவ்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை தாங்கமுடியாத விரக்தியிலேயே மீடியாக்களை அழைத்து ஆதவ் அர்ஜூனா பேட்டிக் கொடுத்து வருவதாகவும், இப்படியே போனால், தன்னுடைய அரசியல் எதிர்காலம் என்பது சூனியம் ஆகிவிடும் என்பதால், தொடர்ந்து லைம் லைட்டில் இருக்க, அவர் இதுபோன்ற பேட்டிகளை கொடுத்து வருவதாகவும், இதுவே தன்னுடைய மிகப்பெரிய அரசியல் வியூகம் என்று அவரே நினைத்துக்கொண்டிருப்பதாகவும் அவரது அணியினரே பேசி வருகின்றனர்.
எழுத இடமில்லாதபோது கையில் பேனா மட்டும் எதற்கு ?
அதே நேரத்தில், அந்த நேர்காணலில் எழுதுவதற்கு இடமும் நேரமும் இல்லையென்றாலும் கூட அவரது கை விரல்களுக்கு இடையே பேனாவை விட்டுக் கொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, அப்படியான ஒரு வழக்கத்தை கொண்டிருந்தால் தன்னை அறிவாளி, படிப்பாளி, பெரிய வியூக வகுப்பாளர் என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்வார்கள் என்று ஆதவ் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்