ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில், எம்எல்ஏவாக இருக்கும்போதே அப்பா ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் ஈவேரா திருமகன் இருவருமே உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த நவம்பர் மாதம் 13ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து விசாரித்து வந்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார்.
2023-ல் மகன் மரணம்
ஈரோடு மாவட்டம், கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன், ஈவேரா திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும்போதே மாரடைப்பு காரணமாக 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து தொகுதி மீண்டும் திமுக தலைமையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
தொகுதியில் அதே ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மகனின் தொகுதியில் தந்தையான ஈவிகேஸ் இளங்கோவன் நின்றார். மகனின் இழப்பும் வயது முதுமையும் அவரைத் தேர்தல் அரசியலில் ஆர்வத்தைக் குறைத்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி
எனினும் சொந்தக் கட்சி, கூட்டணிக் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிட்டார். வயது முதிர்வு காரணமாக அவரால் முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. என்றாலும் அனுதாப அலையும் சேர்ந்ததில், இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
எனினும் 2024ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இன்று (டிசம்பர் 14) உயிரிழந்தார்.
அடுத்தடுத்த ஆண்டில் தந்தையும் மகனும் பலி
ஒரே தொகுதியில் அடுத்தடுத்த ஆண்டில் தந்தையும் மகனும் எம்எல்ஏவாக இருக்கும்போதே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.