நீண்டகாலமாக மனுதர்மப்படி இந்நாட்டின் பெரும்பான்மையின மக்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சி - இவற்றைத் தொடர்ந்து ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் தி.மு.க. ஆட்சிவரை கல்வி வளர்ச்சிக்கு ஆக்கரீதியாகப் பாடுபட்டு வரும் நிலையில், நமது மாணவச் செல்வங்கள் கஞ்சா, குட்கா போன்றவற்றிற்கு அடிமையாகலாமா? அரசு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படுவது யாருக்காக என்பதைச் சிந்தியுங்கள்; அரசு அனுமதித்தால் கல்வி நிலையங்களின் வாயில்களில் நன்னெறி, ஒழுக்கப் பிரச்சாரங்களை மேற்கொண்டு திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடத்திடத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கையில்,  "எமது அறிவார்ந்த மாணவச் செல்வங்களே, எமது அருமை திராவிட சமூக இளைஞர்களே, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இலக்கு. கடந்த ஓராண்டாக அமைந்துள்ள ‘திராவிட மாடல்’ தொடர்ச்சி ஆட்சியான, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய தலைமையில் அமைந்து சிறப்பாக நடைபெற்றுவரும் ஆட்சியின் முன்னுரிமை, நம் மாணவச் செல்வங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனுதர்மம் கோலோச்சிய காரணத்தால் மறுக்கப்பட்ட கல்வி வாய்ப்புகளை, உங்களுக்கு மீட்டுத்தரும் அரும்பணி - ‘திராவிட மாடலின்’ சிறப்பு இலக்கு; கல்வி கற்ற பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வகை செய்யும் வேலை வாய்ப்பு முக்கியம் என்பதாகக் கருதி- நிதி நெருக்கடி - பற்றாக்குறை என்பதையெல்லாம் புறந்தள்ளி, பல்லாயிரம் கோடி ரூபாய்களை உங்கள் எதிர்கால நலன் கருதி, இந்தத் தமிழ்நாடு அரசு செலவழித்து வருகிறது! நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சி பாடுபட்டது.

இந்த ஆட்சியின்மீது எரிச்சலைக் கக்குவோர் யார்?


பெண் கல்விக்கு, திருநங்கையர் மற்றும் ஒடுக்கப்பட்ட, மாற்றுத் திறனாளிகளான நமது ஆற்றல் களஞ்சியங்களை அடையாளம் கண்டு நாளும் அவர்களை முன்னேற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் செயல்வேகம் புயல்வேகமாக உள்ளது. இதை கண்டுதான் இந்த ஆட்சியின்மீது எரிச்சலைக் கக்குகின்றனர். இன எதிரிகளும், பார்ப்பனர்களும், அரசியலில் போட்டியிட்டு தோற்றவர்களும், பதவிக்கு வர முடியாது என்று தெரிந்தும், விபீடண, பிரகலாத, அனுமார், சுக்கிரீவக் கூட்டத்தினை கூலிப் பட்டாளமாக்கி, பகற்கனவு கண்டு பொய்க்கால் குதிரைகள்மூலம் குதிரைப் பந்தயத்தில் ஜெயித்துவிட வீண் கனவு காணுகிறார்கள்! அதை எம்மைப் போன்ற முற்போக்காளர்களும், சமூகநீதிப் போராளிகளும், பொதுநிலை பெற்றோர்களும் பார்த்துக் கொள்வார்கள். இதுபற்றி மற்றவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

மாணவச் செல்வங்களே, கஞ்சா - குட்கா போன்றவற்றிற்கு அடிமையாகாதீர்! மாணவச் செல்வங்களே, உங்களது முக்கிய கடமை, உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அதன்மூலம் உங்கள் பெற்றோர்களை, ஆசிரியர்களை, உங்களது வளர்ச்சிபற்றி கவலைப்படும் ஆட்சியினரை மகிழ்வியுங்கள்! நடைமுறையில் அன்றாடம் ஏடுகளில், ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகள் மிகவும் வேதனையையும், கவலையையும் அளிப்பதாக உள்ளன.



1. போதைப் பொருள்கள் - குறிப்பாக கஞ்சா போதை, குட்கா பயன்படுத்துதல் போன்ற தவறான பழக்கங்கள்மூலம் உங்கள்  வாழ்க்கையினை நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ சீரழித்துக் கொள்ளும் செய்திகள் எம்மைப் போன்ற சமூகநலப் பணியாளர்களுக்கு தாளாத் துன்பத்தைத், துயரத்தைத் தருகின்றன! படித்து, பட்டதாரியாகி, அறிவின் உச்சத்தில் ஆளுமைகளாக வேண்டிய இளம் நாற்றுகள் இப்படி தீய பழக்கத்திற்கு ஆளாகி, கருகிய மொட்டுகளாக ஆகலாமா? சிந்தித்துப் பாருங்கள்! படிப்பும் - ஒழுக்கமும் மிக முக்கியம்!



2. மாணவப் பருவத்தில் கற்கவேண்டியது முதலில் பாடத்தைவிட ஒழுக்கம்தான்


‘‘ஒழுக்கம் என்பது மற்றவர் நம்மை எப்படி நடத்தவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களிடம் நாம் நடந்துகாட்டுவதுதான்’’ என்று எளிய விளக்கத்தைத் தந்தை பெரியார் கூறினார். ‘‘ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து; பக்தி என்பது தனிச் சொத்து’’ என்றும் அருமையயான விளக்கத்தைத் தந்தவர் தந்தை பெரியார். இதை புரிந்துகொண்டு, உங்கள் மாணவப் பருவம் வளர்ந்தால், உங்களது வெற்றி உங்கள் காலடியில்தானே வந்துவிழும்!

ஆசிரியர், ஆசிரியைகளிடம் தவறாக நடந்துகொள்ளலாமா?



ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்வது, ஆசிரியர்களிடம் மிரட்டும் முறையில் நடப்பது, ஆசிரியைகளைக் கேலி, கிண்டல் செய்வது, பள்ளிகளை  ஜாதிச் சண்டை களங்களாக்கிக் கொள்வது, ஜாதி அடையாளக் கயிறுகளைக் கட்டி ஒன்றிப் பழகவேண்டிய மாணவப் பருவத்தில், வேற்றுமை, வெறுப்பு, விதண்டாவாத வீண் வம்புகளில் ஈடுபடுதல் - இவற்றால் நீங்கள் எவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்று, கல்வி கற்கவேண்டிய காலத்தை வீணாக்கி, களர் நிலமாக உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளுகிறீர்கள்!

அரசு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படுவது யாருக்காக?



உங்களது செயலுக்கு அரசு மன்னிப்பது - தண்டனை தராது- - (வெறும்  ‘சர்டிபிகேட் குறிப்பு’ எழுதினால் உங்கள் வாழ்வே மீள முடியாததாகிவிடும் என்பதால்,) அன்பால் உங்களைத் திருத்த அரசு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் நினைப்பதை, நீங்கள் உங்களுக்குப் பயந்து என்று தவறாகப் புரிந்துகொண்டால், அது பாதை மாறி பாழுங் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொள்ளுவது போன்றதாகும். கஞ்சா கடத்தல், ‘கேரியர்’ ஆகி சம்பாதனை, தகுதிக்குமேல் ஆசைப்பட்டு, தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடுதல், அதையெல்லாவற்றையும்விட போக்சோ சட்டம் இவ்வளவு கடுமையான தண்டனை தருகிறது என்பதைப்பற்றிக் கூட கருதாதது, மாணவப் பருவத்தை  ‘மிருகப் பிராயமாகப் கெட்டுப் போக பந்தயம் கட்டுவது’ போன்ற கொடுமைகளில் ஈடுபடலாமா?
21 ஆம் நூற்றாண்டின் அதியற்புத அறிவியல் மின்னணுவியல்  AI என்ற Artificial Intelligence இவை போன்று நாளும் வளர்ந்துவரும் அறிவியல் துணைகொண்டு உயரவேண்டிய எமது மாணவச் செல்வங்களும், இளைஞர்களும் திசை மாறிய பறவைகளாகலாமா? சிந்தியுங்கள்! ஆழ்ந்து சிந்தியுங்கள்!! கண்டிப்பு - உங்களை அழிக்க அல்ல - உங்களை மீட்டெடுக்க - நல்வழிப்படுத்தித் திருத்தி, புது வாழ்வு படைக்கவே!

பள்ளி வாயில்களில் ஒழுக்க நன்னெறிகளைப் பரப்பத் தயார்!


பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழகம்மூலம் முன்பு பள்ளி வாயில்களில் அனுமதி அளித்ததால் பள்ளிக்குள்ளும் இந்த நன்னெறிகளை - பொதுக் கருத்துகளையே மய்யப்படுத்தி - ஒழுக்க நெறி பரப்புதல், நன்னெறிகளை மாணவர்களிடம் பரப்புரை நடத்திட  வாய்ப்பிருந்தது. அறிவியல் பான்மை ஊக்குதல் இந்திய அரசமைப்புச் சட்ட 51-ஏ பிரிவின்படி அனைவருக்கும் உரிமை மட்டுமா? அடிப்படைக் கடமையுமாகும். பள்ளிகள் மீண்டும் ஜூன் மாதத்தில் திறக்கும்போது, ஜூலைவரை நாடு தழுவிய அளவில் அதனை நமது இயக்கம் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது. யாருக்கும் சங்கடம் ஏற்படுத்தாத பிரச்சாரமாக அது அமையும். பெற்றோர், ஆசிரியர்களுக்குத் துணை புரியவே இந்த ஏற்பாடு!" எனத் தெரிவித்துள்ளார்.