திரிபுரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிப்லப் குமார் தேப் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றைய தினம் அவர் சந்தித்தது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று தனது பதவியை பிப்லப் குமார் தேப் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிப்லப் குமார் தேப் யார்? பின்னணி என்ன?


கடந்த 1971-ம் ஆண்டு திரிபுரா மாநிலம் ராஜ்தார் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிப்லப் குமார் தேப், 1999-ம் ஆண்டு திரிபுரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் பிப்லப் குமார் மாநில பாஜக தலைவராக பதவி வகிக்கிறார். 



பிப்லபின் மனைவி பாரத ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிப்லப் தேப், பின்னர் டெல்லிக்கு இடம் பெயர்ந்து ஆர்.எஸ்.எஸில் இணைந்தார். பிறகு 15 வருட இடைவெளிக்குப் பிறகு திரிபுரா திரும்பினார். கடந்த 2016 ஜனவரி 7ம் தேதி முதல் திரிபுரா மாநில பாஜக தலைவராகவும் இருந்து வருகிறார். 2018ல் நடந்த திரிபுரா சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 25 வருட காலமாக நீடித்து வந்த இடதுசாரி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது பாஜக. இடதுசாரிகளின் கோட்டையாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வந்த திரிபுராவை பாஜக கைப்பற்றுவதற்கு முக்கிய காரணாமாக இருந்தவர், பிப்லப். இவர் ஆர்எஸ்எஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தவர். 



ஆகஸ்ட் 2017 இல், பிப்லாப் காங்கிரசில் யில் இருந்து பாஜக-வுக்கு எம்எல்ஏக்களை மாற்றினார். அதன் பிறகு அவர் திரிபுராவின் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக வழிநடத்தி, மாநிலத்தில் மொத்தம் உள்ள 59 இடங்களில் 43 இடங்களை IPFT உடன் கூட்டணி வைத்து வென்றார். அவர் காங்கிரஸின் கோபால் ராய் போட்டியிட்ட பனமாலிபூர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அதே தொகுதியில் சிபிஎம் கட்சியின் அமோல் சோக்ரோபோர்த்தியும் போட்டியிட்டார். இறுதியாக, அவர் 9700 வாக்குகள் வித்தியாசத்தில் இருவரையும் வெற்றி பெற்றார். பிப்லப் மார்ச் 9, 2018 அன்று திரிபுராவின் 10வது முதல்வராக பதவியேற்றார்.


இப்படி அடிமட்ட தொண்டனாக இருந்து கட்சியை மாநிலத்தில் கால்பதிக்க வைத்த ஒருவர் திடீரென ராஜினாமா செய்வது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 2017ல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கொண்டு வந்தது போல பாஜகவுக்கு ஏதாவது நடக்குமோ என்ற பதற்றமும் நிலவி உள்ளது. இது பாஜகவின் அரசியலில் பெரும் திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.