ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வேலைகளை அவர் தீவிர படுத்தி வருவதாகவும் வெளியாகி உள்ள தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர அரசியலில் அதிரடி என்ட்ரி கொடுத்து வெற்றி கண்ட பவன் கல்யாண்

2014-ல் ஜனசேனா கட்சியை தொடங்கினாலும், சில பல தோல்விகளுக்குப் பிறகும் துவண்டுவிடாமல், 10 ஆண்டுகள் காத்திருந்து, 2024 ஆந்திர தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் பவன் கல்யாண். அந்த தேர்தலில், அரசுக்கு எதிரான வாக்குகளை பிரிக்க மாட்டோம் என அதிரடியாக அறிவித்த அவர், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவோம் என அறிவித்தார். ஆனால், அதை ஜனசேனா தொண்டர்கள் ஏற்காத நிலையில், அவர்களிடம் பக்குவமாக பேசி சம்மதிக்க வைத்தார்.

இந்த கூட்டணியை பாஜகவுடன் இணைக்கும் நோக்கிலும், அதற்கு ஏற்றார்போல் தொகுதிகளை தேர்ந்தெடுத்து களமிறங்கினார் பவன் கல்யாண். அப்படி, 21 சட்டமன்ற தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, அனைத்திலும் வாகை சூடி, 100% வெற்றியை பதிவு செய்தது ஜனசேனா. 8 சட்டமன்ற தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பின்னர் பவனின் பிளான் படியே, மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியை பிடித்தன.

தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கருத்து தெரிவித்து வந்த பவன் கல்யாண்

மத்தியில் ஆளும் பாஜக உடன் கூட்டணியில் இருப்பவர் பவன் கல்யாண். தொடர்ந்து மத்திய பாஜகவின் கொள்கைகளை மேடைகளில் பேசிவருகிறார். சமீபத்தில் கூட இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பவன் கல்யாண், லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்? என்றும் கூறியிருந்தார்.

இதேபோல், கடந்த வருடம் சனாதானம் தொடர்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னரே, சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி.. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார்.. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.. உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள் என்று உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார்.

மேலும், உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது “என்று கடுமையாக தாக்கி பேசியிருந்தார் பவன் கல்யாண். தொடர்ந்து தமிழ் நாடு அரசியல் களத்திலும் அவர் பேசுபொருளாகவே இருக்கிறார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் பவன் கல்யாண்.?

மறுபுறம், அதிமுக நிறுவன நாளில் கூட எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியிருந்தார் பவன் கல்யாண். இதேபோல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்த நாட்களில் வாழ்த்து சொல்வது என, தொடர்ந்து தமிழக அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் பவன் கல்யாண். தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை புகழ்ந்து பேசிவரும் அவர், அந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும், அவர்களுடன் சேர்ந்து தமிழக அரசியல் களத்தில் தானும் இறங்க வேண்டும் என்றும் கூறிவருகிறாராம்.

பவன் கல்யாணின் தமிழ்நாடு அரசியலில் என்ட்ரி கொடுக்கிறாரா.? அப்படி கொடுத்தால், அவருக்கு எந்த அளவிற்கு தமிழ்நாடு கை கொடுக்கிறது, ஆந்திராவில் செய்தது போல், தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று பார்க்கலாம்.