உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை:


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்படி செய்தார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை நிரூபிக்கும் வகையில், பலநூறு கோடிக்கு ஊழல் நடந்ததுள்ளன என்பதை அறப்போர் இயக்கம் வலுவான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது.


இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.ஆனால், எஸ்.பி.வேலுமணியோ சர்வ சுதந்திரமாக தமிழகம் முழுக்க சுற்றிவந்து ‘சத்ரு சம்கார’ யாகங்கள் செய்துகொண்டிருக்கிறார்.


இலஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை, வெளியாகியுள்ள ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், எஸ்.பி.வேலுமணி செய்திருப்பது சாதாரண ஊழல் இல்லை. ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது, டெண்டர் எடுத்த தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளன. பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளன,  தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது. இப்படி முறைகேட்டுப் பட்டியல் விரிவாகப் போகிறது.


  






இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், எஸ்.பி.வேலுமணியின் ”அசுர பலத்தை” மனதில் கொண்டும் அவரை இலஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகக் கைது செய்யவேண்டும். தாமதிக்கும்பட்சத்தில், ஊழல் தொடர்பான ஆவணங்களை அழிப்பது, சாட்சிகளைக் கலைப்பது, வழக்கின் விசாரணைக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது போன்றவற்றை எஸ்.பி.வேலுமணி மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. 


மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற செய்திதான், எந்தவிதக் கூச்சமுமின்றி தொடர்ந்து இலஞ்ச-ஊழலில் ஈடுபட்டு வருவோர்க்கு தரப்படும்  எச்சரிக்கையாக இருக்கும். 


எஸ்.பி.வேலுமணி விவகாரம் மட்டுமல்ல, இலஞ்ச-ஊழல் தொடர்பான அனைத்து விசாரணைகளிலும் இலஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை விரைவாகவும் தீவிரமாகவும் இருக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.


புற்றுநோயாக சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிராக, வலுவாகப் போராடிவரும் அறப்போர் இயக்கக் குழுவினரின் அறப்போர் தொடர வாழ்த்துகள்..!!