10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத வேதனை,  ‘ஜெ’ இருக்கும் வரை வெற்றி பெற முடியாத சோதனை. ஒவ்வொரு உடன்பிறப்பாக கட்சியை விட்டு ஓடிய காட்சிகள் ! என கடும் நெருக்கடியில் இருந்த திமுக எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என துடித்தது. மருமகனின் அறிவுறுத்தலில் பீஹார் பிராமின் பிரசாந்த் கிஷோர் தனது ஐபேக்கை காட்டி ஆட்சியை பிடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார். ஒரு அரசியல் மார்க்கெட்டிங் கம்பேனியை நம்பி ஸ்டாலின் களத்தில் இறங்கினார். ஏற்கனவே நான் சொன்னபடி ‘ எவ்விலை கொடுத்தும்’ ஆட்சியை பிடிக்க தயாரானார். அதன் விளைவுதான் பிரசாந்த் கிஷோர் அள்ளிவிட்ட அத்தனை வாக்குறுதிகளும் திமுக தேர்தல் அறிக்கையில் அச்சேறின. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அதிமுக இடைக்கால பட்ஜெட்டின் மூலம் தமிழ்நாட்டின் நிதி நிலை எப்படி இருக்கிறது என்பதும், கடன் கடலில் எவ்வளவு அடியில் தமிழ்நாடு மூழ்கி இருக்கிறது என்பதையும் அன்றைய நிதி அமைச்சர் வெளிச்சம் போட்டு காட்டினார். பிறகும், ‘செய்ய முடியாத வாக்குறுதிகளை’ திமுக தேர்தல் வாக்குறுதியாக தந்தது.


இந்த பட்ஜெட்க்கும் திமுகவின் 100 நாள் அரசின் செயல்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்பது புரிகிறது. நீட் தேர்வை நீக்க முடியாது என தெரிந்தும் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என திமுக அறிவித்தது. 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழ்நாடு அரசு தத்தளிக்கிறது என்று தெரிந்தும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவும் தரும் கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி, 20 ஆயிரம் கோடி செலவு வைக்கும் கூட்டுறவு வங்கி கடன், நகைக் கடன் தள்ளுபடி என பேசியது, சுமார் 6 ஆயிரம் கோடி செலவும் தரும் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் சவடால் விட்டது என ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக போகிற போக்கில் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக அள்ளித் தெளித்தது திமுக.


 


ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட 2021 – 22 ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் இதில் எந்த அறிவிப்பும் இல்லை. பெட்ரோல் விலையில் ரூ. 5 குறைப்போம் என சொல்லிவிட்டு, இப்போது ரூ.3 மட்டும் குறைத்து அறிவித்திருக்கிறார்கள். இது பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்த மாதிரி எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றாவிட்டாலும் இதுவாவது கிடைத்ததே என மக்களுக்கு ஒரு பூரிப்பு. இந்த அறிவிப்பு செய்யாமல் போயிருந்தாலும் கூட மக்களிடமிருந்து வெறும் முணுமுணுப்பை தவிர வேறு சத்தம் எழுந்திருக்காது. காரணம் வெள்ளை அறிக்கையில் ‘ ஒன்றும் கிடைக்காது’ என எதிர்பார்ப்புகளுக்கு சம்மட்டி அடித்து நொறுக்கிவிட்டதே சாட்சி. அதேபோல, சரியான நபருக்கே மானியங்களும் இலவசங்களும் போய்ச்சேர வேண்டும். அதற்கு BPL LIST எங்களிடம் இல்லை என கைவிரித்து காரணம் காட்டி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாயும், நகைக்கடன் – கல்விக்கடன் காரர்களுக்கு நிதி மந்திரி ‘நாமம்’ போட்டுவிட்டார். இதைவைத்து இன்னும் 3 ஆண்டு கால அவகாசம் எடுத்துக்கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என தள்ளிப்போடுவார்கள்.


அறிஞர் அண்ணாதுரையும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியும் படித்த பட்ஜெட் அறிக்கை வாசிப்பு, இப்போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் கடித்து குதறப்பட்டிருக்கிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மேற்படிப்பு மேலைநாடுகளில் படித்தார் என்பது தெரியும். ஆரம்ப கல்வி தமிழ்நாட்டில்தான் படித்தாரா ? எனத் தெரியவில்லை. நன்றாக தமிழ் பேச, படிக்க அரசு எதாவது மானியம் வழங்கினால் நல்லதோ என அமைச்சரின் வாசிப்பு நமக்கு உணர்த்தியது.



எஸ்.ஆர்.சேகர், பாஜக மாநில பொருளாளர்


பள்ளிக் கல்விக்கு கூட பட்ஜெட் நிதி ஒதுக்கீடு சென்ற ஆண்டை விட குறைத்தது வேதனை அளிக்கிறது. அமைச்சர் சேகர்பாபுவும், மா.சுப்பிரமணியும் தான் தற்போதைய ஹீரோக்கள். முதலில் இலவசமாக பெறும் தடுப்பூசியை மத்திய அரசு போதிய அளவில் வழங்கவில்லை என்ற மா.சு பின்னார் 19 லட்சம் அதிகமாக வழங்கியதற்கு பாராட்டினார் என்பது வேறு விஷயம். கோயில் நில ஆக்கிரமிப்புகளையெல்லாம் அகற்றி நிலங்கள் மீட்கப்படும் என்ற சேகர்பாபு கொரோனாவை காரணம் காட்டி அத்தனை கோயில்களையும் பூட்டி வைத்து இந்துக்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த கொரோனா இசுலாமியர்களின் பக்ரீத்துக்கும், வேளாங்கண்ணி, தூத்துக்குடி பனிமயமாதா விழாக்களிலும் தலைக்காட்டாதோ என இந்து முன்னணி கேட்பதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. மந்திரி நாசர் டிஜிப்யாக மாறி அதிமுக முன்னாள் மந்திரிகள் யார் யார் எப்போது கைது செய்யப்படுவார்கள் என பேட்டிக் கொடுக்கிறார். மந்திரி பெரியசாமியின் மருமகன் மெர்சி செந்தில்குமார் பாதிரிகளும் கன்னியாஸ்திரிகளும் என்ன குற்றம் செய்தாலும் போப் ஆண்டவரின் அனுமதி பெற்றே கைது செய்ய வெண்டும் என்கிறார். இவர்களுக்காகதான் திமுக ஓடி ஓடி உழைக்கிறது. ஆனால், அவர்களோ திமுகவை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள், ஒரு வேளை பாதர் ஜார்ஜ் பொன்னையா சொன்ன திமுகவினர் பிச்சைக்காரர்கள் என்பது உண்மையோ என்னவோ தெரியவில்லை. காரணம் திமுக இதுவரை இதனை மறுக்கவில்லை.



பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் லியோனி, சுப.வீ போன்றோரும், பொருளாதார ஆலோசர்களாக ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் போன்றோரை நியமித்தது திமுகவின் இடதுசாரி ஜால்ராவிற்கு எடுத்துக்காட்டு. யார் முதல்வர் என்பது இப்போதும் திமுகவில் சந்தேகம்தான். செயிண்ட் ஜார் கோட்டைக்கு மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் மருமகன் சபரீசன், கட்சிக்குள் மகன் உதயநிதி ஸ்டாலின் என்பதாக பங்கு போட்டு கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.


இந்த நூறு நாள் ஆட்சி மீதமுள்ள 1,725 நாட்களில் என்ன நடக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆக மொத்தத்தில் இந்த நூறு நாள் ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை வேதனை மட்டுமே எஞ்சியிருக்கிறது.